Aug 01

உள்நாட்டு போர் ஏற்படும்: மத்திய அரசுக்கு மம்தா எச்சரிக்கை

தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் என்ற பெயரில் நாட்டு மக்களை பிரித்தால் உள்நாட்டுபோர் வெடிக்கும் என மேற்குவங்க முதல்வர் மம்தா எச்சரிக்கை விடுத்தார்.

வங்கதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு வரைவு பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் பதிவேட்டில் சேர்க்கப்படவில்லை. குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், அசாம் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசின் இந்த முயற்சிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக இன்று டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டி, தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் என்ற பெயரில் மக்களை மத்திய அரசு பிரித்தாளுகிறது. மத்திய அரசின் இந்த செயல்பாடு நாட்டில் உள்நாட்டு போருக்கு வழிஏற்படுத்தும். ரத்த ஆறு ஓடும் என்றார்.