Jun 02

அமெரிக்காவின் முடிவால் ஏமாற்றமடைந்துள்ள கனடா!

பரிஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்துள்ளமை ஏமாற்றமளிப்பதாக கனடா தெரிவித்துள்ளது.

உலகளாவிய பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் வகையில் உலகின் சுமார் 195 நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தம், தமக்கு பாதகமான விளைவுகளை விளைவிக்கும் என கூறி அமெரிக்கா குறித்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ, இந்த முடிவினால் தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறியதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராடுவது மற்றும் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான வழிவகைகளில் பொருளாதாரத்தினை வளர்த்தெடுப்பது என்பவற்றில் கனடா அசைக்கமுடியாத பொறுப்பினைக் கொண்டுள்ளது.

மாறிவரும் இந்த பருவநிலையால் ஏற்படும் பாதகங்களை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் காத்திரமான கூட்டு முயற்சியில் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்பதனை கனேடியர்கள் உணர்ந்து வைத்துள்ளர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.