Aug 01

வெளிநாடுகளிலிருந்து யாழ் செல்லும் தமிழர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்!

வெளிநாடுகளில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு செல்லும் வீதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.


இதற்கு உதாரணமாக இன்றும் ஒரு பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.,

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமான முறையில் இருப்பதாகவும், அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின், மாரகஹவெவ 27ம் கட்டை பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்றோடு மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்து, யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிலரே குறித்த வானில் இருந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை தினம் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு சென்று வருகின்றனர்.

இவர்கள் பெரும்பாலும் இரவு வேளைகளிலே A-9 வீதியால் பயணம் மேற்கொள்கின்றனர், இவாறான சந்தர்ப்பங்களில் சாரதிகள் தூக்கமின்மை காரணமாக வாகனத்தை செலுத்துவதால் அடிக்கடி இவ்வீதிகளில் விபத்துக்கள் இடம்பெற்று உயிரிழப்புக்களும் இடம்பெறுகின்றன.

எனவே புலம்பெயர் தமிழர்களாக இருந்தாலும், அல்லது வேறு யாராக இருந்தாலும் இரவுவேளைகளில் தூக்கம் விழித்தோ அல்லது அவதானமில்லாமையோ வாகனத்தை செலுத்தாமல் அவதானமாக போக்குவரத்துக்களை மேற்கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.