Jun 02

இலங்கையில் மெல்ல மெல்ல நகரும் கைதுகள், சித்திரவதைகள்

கண்ணிவெடிகள்வெடித்தன, இராணுவம் திருப்பி தாக்கியது எனப்போர் ஆரம்பமாகி அது பெரிதாகி கடுமையாகியதால், இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதி தமிழ் மக்கள் உலக நாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர்.

இவர்கள்தான் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்களின் முதலாம் தலைமுறையினர். இவர்களுக்கு பிள்ளைகள் பிறந்தனர். வளர்ந்தனர். இன்று அவர்களின் திருமணங்கள் நிறைவுற்று வாழ்கின்றார்கள்.

இவர்கள்தான் இரண்டாம் தலைமுறையினர். இவர்களின் குழந்தைகள் தான் மூன்றாம் தலை முறையினர். முதலாம் தலைமுறையினர் இரண்டாம் தலைமுறையினரை எப்படி வளர்த்தெடுத்தார்கள்.

இரண்டாம் தலைமுறையினர் மூன்றாம் தலைமுறையினரை எப்படி வளர்த்தெடுத்தார்கள் என்பவற்றின் விளைவே மூன்றாம் தலைமுறையினரில் பிரதிபளிக்கும். அதில் சமகாலத்தாக்கங்களும் சேர்ந்திருக்கும்.

இந்தக்கட்டுரையில் நாம் பார்க்க இருப்பது புலம்பெயர்ந்த நாடுகளில் இலங்கைத்தமிழர்களின் மூன்றாம் தலைமுறையினரின் நிலை.

தாய்மொழியான தமிழ்மொழி பேச்சுவழக்கிலாவது பயன்படுமா! தமிழ்ப்பண்பாட்டு வாழ்வியல் முறைகள் இருக்குமா!! உணவுப்பழக்கங்கள் தமிழர்களுடையதாக இருக்குமா? சமயவாழ்க்கை முறைப்பழக்க வழக்கங்கள் ஆழமாக இருக்குமா!!! தமிழர் உடைப்பழக்கவழக்கங்கள் இருக்குமா? குன்றி இருக்குமா தற்காலத்தில் உள்ளன தொடருமா??

என்று புலம்பெயர் நாடுகளின் தமிழினத்தின் எதிர்காலத்தை அலசுவது தான் இந்தக்கட்டுரை.

1-முதலாம் தலைமுறையினர். 2-இரண்டாம் தலைமுறையினர். 3-மூன்றாம் தலைமுறையினர்.

இந்த மூன்று வகையினர்களிடையே ஏற்பட்ட மாற்றங்களும் இனமரபுரீதியான தாக்கங்கள். இந்த நாட்டில் 3 வேறுபட்ட காலங்களில் இந்த நாடுகளின் தாக்கத்தினாலும் எப்படி மாற்றியிருக்கும் எனப்பார்ப்போம்.

1990களில் இரண்டு வேறு மாநிலங்களில் Hamburg இடத்து டென்மார்க்கிற்கு அண்மியமாக இந்த மாநிலம் கடற்கரையை அண்டிய மாநிலம் Oldenburg.

இன்றும் மிகக்குறைவான தமிழர்கள் வாழும் இடம். இதுவரை தமிழ்ப்பாடசாலைகள் இல்லை சைவக்கோயில்கள் இல்லை ஆனால் அங்கு வாழும் 15 முதல் 20 வரையான தமிழ்ப்பிள்ளைகளைக் காணமுடிந்தது.

அவர்கள் நன்கு தமிழ் பேசுகின்றார்கள். தமிழ்ப்பண்பாட்டு நிகழ்வொன்றில் மிகுந்த ஈடுபாடுடையவர்களாக காணப்பட்டனர். அதில் ஒருவர் டொச்லாண்டில் (ஜேர்மனியில்) டாக்டர் (வைத்தியக்கலாநிதி) இரட்டைப்பிள்ளைகளின் தந்தையாக இன்று இருக்கின்றார்.

அவரின் சகோதரர் தாதி (Hrankenschwester) இவர் ஒரு 3 வயது பிள்ளையின் தந்தை இவருடன் 2 மணித்தியாலங்கள் பழகிக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரின் பண்பு வெகுவாகப் பிடித்தது எனக்கு மட்டுமல்ல மனைவி பிள்ளைகளுக்கும் தான். நன்கு தமிழ் பேசினார் நல்ல பண்பாளனாக இருந்தார்.

அவரிடம் எங்களைப் போல் வந்தவர் தானே நீரும், எத்தனையாம் ஆண்டில் எத்தனை வயதில் வந்தீர்? எனக்கேட்டேன். அதற்கு 1990ஆம் ஆண்டில் 6 வயதில் வந்தேன் என பதிலளித்தார்.

தந்த பதிலால் நான் திகைத்துப் போனேன். எப்படித் தமிழில் இவ்வளவு அழகாக பேசுகின்றீர்? Oldenburg மாநிலத்தில் தமிழ்ப்பாடசாலை இல்லை என்கின்றீர்களே என்றேன்.

நானும், அண்ணாவும் வீட்டில் நன்றாக அம்மா அப்பாவுடன் தமிழில் பேசினோம். அதனால் நன்றாக நானும், அண்ணாவும் தமிழ் பேசுவோம். தாய்மொழி அவசியம் தானே அண்ணா! என்றார். நான் இலங்கையில் இருந்து பெண்ணை அழைத்து திருமணம் செய்தேன்.

அதனால் மனைவியுடனும் தமிழில் பேசுவேன். என் பிள்ளைக்கும் தமிழ்பேசக்கற்று கொடுப்பேன் என்று உறுதியாகப் பதிலளித்தார்.


ஓம் சரிதான் நீரும் 6 வயதில் இங்கு வந்து தமிழ் பாடசாலை இல்லாத மாநிலத்தில் உமது அப்பா, அம்மாவின் தமிழ் ஆர்வத்தாலும் அப்பா அம்மாக்களின் நண்பர்களின் சூழலிலும் நீர் நன்றாக தமிழ் பேசப்பழகியுள்ளீர்.

அதனால் உமது பிள்ளைகளும் நிச்சயமாக நன்றாகத் தமிழ்பேசுவார்கள். அவர்கள் இந்த புலம்பெயர்ந்த நாடுகளின் மூன்றாம் தலை முறையினராக இருப்பார்கள் என்றேன்.

அத்துடன் இந்தப்பகுதியில் 15-20 தமிழ்ப்பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்றால் ஏன் தமிழ்ப்பாடசாலை இல்லை. அதனை மேற்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் உங்களைப் போல் எல்லாப் பெற்றோரும் இருக்கப் போவதில்லை.

இவ்வளவு ஆர்வமாக இருக்கின்றீர்கள். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள், என்ற போது இன்னும் பலர் என்னைப் போல் உள்ளார்கள் என்று அவர்களையும் அவர்களின் தமிழ் ஆர்வங்களையும் எடுத்துச் சொன்னார். பிள்ளைகள் போதாது அதனால் செய்ய முடியாது உள்ளோம் என்றார்.

இப்போது 15-20 பிள்ளைகளாக இருப்பவர்களுக்கு இன்னும் 20 ஆண்டுகளில் அவர்களின் பிள்ளைகளாக ஆக்குறைந்தது 50 பிள்ளைகள் இருப்பார்கள் தற்காலத் தொடர்ச்சி இல்லாமல் எப்படி அவர்களுக்கு திடீர் என்று தமிழ்ப்பாடசாலை நடத்த முடியும்.

அதனால் இப்போதே முயலுங்கள் என்று உற்சாகப்படுத்தி விட்டு வந்தேன். பின்னர் நாளை ஊருக்கு குடும்பமாகப் போகின்றேன், வந்து தொடர்பு கொள்கின்றேன் என்றார்.

உங்கள் பயணம் நன்றாக அமையட்டும் என்று வாழ்த்தினேன். போயிற்று வாறேன் ஏதும் தேவை என்றால் தொலைபேசியில் கூறுங்கள் என்று நிறை தமிழனாகச் கூறிச் சென்றார்.

“ஒரு பானைச் சோற்றுக்கு, ஒரு சோறு பதம்” என்பது போல் அவரின் திறமைகளால், அவரின் தமிழ் ஆர்வத்தால் அந்த மாநில மக்களே மதிக்கப்படுவார்கள்.

அங்கு குறைந்த தமிழர்கள் வாழ்ந்தாலும், தமது உறவுகளை நட்புகளை Oldenburg அழைத்து மஞ்சள் நீராட்டு விழாவைச் சிறப்பாகச் செய்த அந்த நண்பரை மிகவும் பாராட்டுகின்றேன்.

எல்லோரும் இரவிரவாக வந்தவர்களை எல்லாம் வரவேற்ற பண்பு தமிழுக்குரியது. இது எந்த நாட்டிலும் எப்போதும் இருக்கும் இதனை இன்று வரை நிலைநாட்டி இருப்பதே தமிழப்பண்பாட்டின் சிறப்பு.

இதே சமகால குடும்பம் ஒன்றினை இதற்கு எதிர்மறையான நிலையில் வளர்ந்து தற்போது வெள்ளையர்களாக வாழும் இன்னுமொரு குடும்பத்தினரை நொயிசு (டுசுலோ) பகுதியில் பார்த்திருக்கின்றேன்.

அத்தகையவர்களின் ஆரம்பங்களை 1990களின் முற்பகுதியில் கண்ணுற்றதால், எதிர்கொண்டதால் 1990களின் பிற்பகுதியில் சுவிற்சர்லாந்தில் வில்லுப்பாட்டு ஒன்று தயாரிக்கும் போது என்மனதில் எழுந்தவை கவி வரிகளாகின.

அவைப் படியென்றால் அழுகின்றதே பிள்ளை

ஆர்.ரீ.எல் பார்க்குதே பிள்ளை.

இடியப்பம் வேண்டாம் நூடில்சுதான் வேணும்

பண்டிப்பொரியலே வேணும்

அதை வெட்டி உண்டிட கத்திதான் வேணும்.

என்னிலே இல்லாத பற்றுப்பாசம் இந்த

தொலைக்காட்சிப் பெட்டியிலும்

திரைப்படங்களிலும் உண்டு.

உழைத்தெல்லோ வாறேன் சாப்பாடு

என்று கணவன் கேட்டால்

அலுப்பாக இருக்குது அப்பா

இருக்கிறதைப் போட்டுச் சாப்பிடுங்கள் அப்பா

எண்டு தொடர்ந்து படம் பார்க்கின்றார்

என்மனைவி …. என்கின்றார் ஒருகணவர்.

இதற்கு அமைய வாழ்ந்தவர்களின் பிள்ளைகள் மேற்குறிப்பிட்டவர்களுக்கு எதிர்மறையாக தமிழர்களோடு சேராத பிள்ளைகளாக தமிழ் தெரியாத பிள்ளைகளாக வாழ்கின்றார்கள்.

1. புலம் பெயர் நாடுகளில் பெற்றோர் பிள்ளைகள் இடைவெளிகளுடன் வாழ்வது காணக்கூடிய குறைபாடுகளில் முக்கியமானதாக இருக்கின்றது.

2. பிள்ளைகளுடன் மிகவும் நெருங்கிப்பழகி வாழும் முறைகளை தவிர்த்து வருகின்றனர்.

3. பிள்ளைகளுடன் நேரங்களை செலவழிக்க நேரமில்லை என்கின்ற பெற்றோர்களே அதிகமாகக் காணப்படுகின்றனர்.

4. பிள்ளைகளுடன் ஒன்றாக உணவருந்தும் பழக்கத்தினை கூடத்தொடர முடியாமல் உழைக்கும் பெற்றோர் என்ற பெருமைகளுடன் வாழ விரும்புகின்றார்கள்.

5. அவர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதில்லை. மிதியுந்து ஓடுவதையோ, நடப்பதையோ பெற்றோர்கள் செய்வதில்லை.

6. கோடைகாலங்களில் நீச்சல் இப்படியானவற்றிக்கு பிள்ளைகளுடன் இணைந்து செயற்படுவதில்லை.

7. விடுமுறை காலங்களிலும் தமது நண்பர்களுடன் இணைந்து செல்வதால் பிள்ளைகளுடன் நேரங்கள் செலவிட முடியாமையாக இருப்பது.

8. உறவினர் வீடுகளில் நேரங்களைக் களிப்பது குறைவு.

9. சுற்றுலா இடங்களுக்கு செல்வது குறைவு.

10. பிள்ளைகளுக்கு மகிழ்வு தரும் விடயங்களில் அக்கறையுடன் ஈடுபடாமை. இவை முதலாம் தலைமுறையினரின் குறைபாடுகளாக இருந்தன இவை தொடரக்கூடாது.

11. தமிழில் பேசப் பிள்ளைகளைத் தூண்டுவது இல்லை.

12. தொலைக்காட்சியில் தனுசு படத்தயாரிப்பால் தான் பிள்ளைகளை பார்ப்பதில்லை என்று சொல்வதை பார்த்து அழும் நாம் எம்மைப்பற்றி எண்ணிக்கொள்ளாதது போன்று பல.

முதலாம் தலைமுறையினர் என்று பார்க்கும் போது, நான் வந்த காலங்களான 1990களில் தான் குறுகிய காலப்பகுதியில் அதிக தமிழர்கள் பல நாடுகளுக்கு வந்துள்ளார்கள் என்ற தகவலையும், எப்படி ஏதிலிகளாக தங்களை விண்ணப்பித்து கொண்டார்கள் என்ற தகவலையும், அவர்கள் புதிய நாட்டில் புதியமொழி புதிய உணவு வகைகள், கடும் குளிர் புதிய வேலைகளைத் தேடல் இன்று தமிழர்களுக்கு எங்கும் தமிழர்களின் உதவிகள் உண்டு. அன்று அப்படி இல்லை.

எப்படியோ வேலைகள் தேடி வேலைகள் செய்தமை, பின் திருமணங்கள் செய்து கொண்டமை முதலாம் தலைமுறை நிலை. பிள்ளைகளின் தமிழ் பழக்கவழக்கங்கள் பற்றி கவிதைகள், வில்லுப்பாட்டுகள்,வெளிநாடுகளில் இலங்கை அரசியல் பேசலாமா என்ற தலைப்பில் பட்டிமன்றங்கள் கூட செய்திருக்கின்றோம்.

முதலாவது மிகப்பெரிய பட்டிமன்றம் லுசேர்ண் தமிழ் மன்றத்தால் நிகழ்த்தப்பட்ட தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு விழாவில் ஆகும். அப்பட்டிமன்ற தலைப்பு வெளிநாடுகளில் தமிழர்பண்பாடுகள் சிறப்புறுமா? சிதைவுறுமா? என்பதாகும்.

இப்படியாக சுவிற்சர்லாந்திற்கு புதிதாக வந்த தமிழர்கள் பற்றிய பதிவுகளையும், சுவிற்சர்லாந்தினைப் பற்றிய அடிப்படையான தகவல்களுடனும் 2013ஆம் ஆண்டில் சுவிற்சர்லாந்தும் தமிழர்களின் குடியேற்றமும் என்ற நூலை எழுதி வெளியிட்டிருந்தேன்.

இதை இங்கு குறிப்பிடுவதின் நோக்கம் சுவிற்சர்லாந்திற்கு வந்ததது முதல் தமிழ்ப்பண்பாடு, தமிழர் பற்றிய எண்ணங்களோடு அவதானித்துக் கொண்டிருந்த பட்டறிவுகள் இக்கட்டுரையில் பிரதிபளிக்கும் என்பதனால்.,

தாய்நாட்டில் தமிழ் பண்பாடு தமிழ்ப்பாடசாலைகள் கோவில்கள் நூல்நிலையங்கள் என வாழ்ந்தவர்கள் மாறுபட்ட சூழலில் வாழ்ந்தாலும், 5 முதல் 10 ஆண்டுகளில் அதையொத்த சூழலை மெல்ல மெல்ல உருவாக்க முனைந்தனர்.

தமிழர் பொருட்கள் வாங்க கூடிய பல்பொருள் அங்கடிகள், சில புத்தகங்களை பத்திரிகைகளை வாசிக்க கூடிய நகர நிர்வாகங்களின் ஒத்துழைப்புகளுடன் சிறியளவிலான நூல்நிலையங்கள், கடவுள் படங்களை வைத்து வழிபடும் சிறிய பெரிய மண்டபங்கள் அதில் கூடுவோரின் பிள்ளைகளுக்கான தமிழ்ப்பள்ளிகள் இப்படி சின்னச்சின்ன நடவடிக்கைகள் தொடங்கின தொடர்ந்தன.

அடுத்த கட்டம் தைப்பொங்கல் விழாக்கள் ஆரம்பித்தன. அதுபோல் சித்திரைப்பிறப்பு கொண்டாட்டங்கள். பின்மாநிலங்களில் தமிழர்களின் தமிழ்ச்சங்கங்கள் மன்றங்கள் உருவாகி அங்கொன்றும் இங்கொன்றுமாக விழாக்கள் நிகழ்ந்தன.

அவற்றில் மறக்கமுடியாதனவாக 1993இல் சூரிச் இந்து மாமன்றம் நிகழ்த்திய இந்து மாநாடு நினைவிற்குரியது.

அதில் திரு.குன்னக்குடி வைத்தியநாதனை அழைத்திருந்தனர். பேராசிரியர் திரு.சத்திப்புயல் பாண்டிச்சேரி அவர்களை பரிசிலிருந்து அழைத்திருந்தார்கள். ஒரு தமிழ் ஏடு என்று கட்டுரைகள் அடங்கிய சிறிய இதழும் வெளியிட்டார்கள்.

அதில் மனிதனும், மதமும் என்ற தலைப்பில் நானும் ஒரு கட்டுரை ஒன்றினை எழுதியிருந்தேன். தமிழர்களுக்கிருந்த தாகம் தணியும் விதமாக அந்தவிழா அமைந்திருந்தது.

அவ்வாறு வோ மாநிலம் தமிழ் ஒலியின் (லவுசானில்)- ஜெனீவாவில் தமிழ்மன்றத்தின் சிறப்பான விழாக்கள் தொடர்ந்து நடந்தன.

நாடகங்கள் பட்டிமன்றங்கள் கவியரங்கங்கள் பேச்சுக்கள் வினோதவுடைக்காட்சிகள் கவிதைத்தொகுப்பு வெளியீடுகள் இவை சிறப்பாக நிகழ்ந்து வர அரசியல் சார்ந்த விழாக்களும் பிற்காலங்களில் பெரியளவில் இடம்பெறலாயிற்று.

இக்காலங்களில் பெற்றோருடன் வந்த பிள்ளைகள் தமிழ்படிக்க பாடசாலைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இவற்றிக்கான தேர்வுகள் பேச்சுப்போட்டிகள் பெரிதும் சிறிதுமாக நடக்கத் தொடங்கிவிட்டன. லவுசான் மாநிலம் பேர்ண்நகரில் புறுட்டோவ் சூரிச் போன்ற அதிகம் தமிழர்கள் வாழ்ந்த மாநிலங்கள் முன்னணி வகுத்தன.

அதன்பின் இத்தகையன அரசியல் நிர்வாக் கட்டமைப்புகளிடம் சென்றன. பின்னர் எங்கும் இவை தொடங்கின. இந்த காலங்களில் தமிழ் குடும்பங்கள் பிள்ளைகளுடன் மிகவும் நெருக்கமாக எமது தாயக முறையை ஒத்திருந்தனர்.

ஆண்கள் மட்டுமே வேலைக்கு செல்ல பெண்கள் பிள்ளையை வளர்த்தல், தமிழ் கற்றுக் கொடுத்தல், தமிழ்ப்பாட வீட்டுவேலைகளை மாணவர்கள் மிக அக்கறையுடன் செய்து வந்தார்கள்.

தற்காலத்தில் வளர்நிலை ஒன்றில் கூட வீட்டு வேலை செய்து வருவது கடினம். காரணம் அம்மாக்களுக்கு நேரமில்லை வேலை. தொடர் நாடகம் பார்த்தல், தொலைபேசி உரையாடல், கொண்டாட்டங்கள் அதிகம்.

பிள்ளைகளுடன் அன்பாய் இணைந்த வாழ்க்கையை பலர் இழந்து உண்மை வாழ்வை இழந்து விட்டனர். இத்தகைய குடும்பத்தினரின் மூன்றாம் தலைமுறையினரைத்தான் நாம் எண்ணிப்பார்க்கையில் தமிழரின் உணவை இழந்திருக்கக்கூடும்.

அது சார்ந்த பண்பாடுகள் இந்த நாட்டவர் முறைகள் ஆதிக்கம் பெற்றிருக்கலாம். அதன் காரணமாக அவர்கள் தமிழர்கள் அல்லாத கறுப்பர்கள் ஆகலாம்.

அவர்களின் குடும்பங்களில் தமிழை தேடிப்பார்க்க வேண்டி இருக்கலாம். நிச்சயமாக தற்போது நடக்கும் பாரிய குறைபாடுகளால் இது நடக்க அதிகமான வாய்ப்புகள் உண்டு.

இதனை விட மதுப்பாவனை அதிகம் காணப்படுவதும் பிள்ளைகளின் குணாதிசயங்களில் பழக்கங்களில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.

அதேபோன்று வாழ்வியல் ஒழுக்கங்களிலும் சாட்டுப்போக்கான சடங்கான திருமண வாழ்க்கைகள் வேறுபட்டதாக இருக்கலாம்.

வெள்ளை நிறத்தவர்களுடன் வாழ்வியல் கலப்புகள் இருக்கலாம். சில குடும்பத்தினர் வியக்கும் வண்ணம் இங்கும் இப்படி சைவ தமிழ் குடும்பமா? என்று வியக்கும் அரிதான குடும்பங்களும் நிச்சயமாக இருக்கும்.

இவர்களே மூன்றாம் தலைமுறையினரிடத்தில் தமிழ் கோவில்களுடன் அதி நெருக்கம் கூடியவர்களாக இருப்பார்கள். அடுத்து தமிழுடன் ஈடுபாடானவர்கள் ஒருவகையினராக தமிழ் பள்ளிகள் தமிழ் சார்ந்த நடவடிக்கையில் தமிழ் கலைகள் சார்ந்தும் இருப்பார்கள்.

இவர்கள் தமிழ் கலைகளுடன் இருப்பதால் சமூகத்தில் அடையாளம் உடையவர்களாகவும் பல்முகம் கொண்டவர்களாக பாலமாக இருப்பார்கள்.

மூன்றாம் பிரிவினர் இவைகள் அனைத்தும் தேவையில்லை. நாம் வெள்ளையர் போல் வாழ்வோம். தமிழாவது கலையாவது தமிழ்ப்பண்பாடாவது, என்று மற்றவர்களை குற்றம் கூறி மற்றவர்களை ஒதுக்குபவர்களாக இருப்பார்கள்.

இவர்களை மற்றவகை இருசாராரும் ஒதுக்கி நடந்து கொள்வது போன்ற மூன்று வகையினர் இயல்பாகவே உருவாக வாய்ப்பு இருக்கின்றது. அப்படி இயல்பான ஒருநிலை உருவானாலும், கடும் முரண்பாடுகள் இன்றி நாம் தமிழர் என்ற தமிழ்ப்பொதுமை மனதிலும் எதிலும் இருத்தலை இன்றே நாம் அத்திவாரம் இடல் அவசியம்.

தமிழ் பல்பொருள் அங்காடிகளில் உடை தவிர்ந்த ஏனைய வாணிப துறைகள் மறைந்து போக வாய்ப்பிருக்கின்றது. காரணம் உணவுப்பழக்கங்கள் பெரியளவில் மாற்றம் கண்டுவிடும்.

அதற்கான அத்திவாரத்தை முதல் தலைமுறையினரில் அநேகர் உருவாக்கி விட்டனர். வீடுகளில் தயாரித்த உணவுகளையும் தமிழர் உணவுகளையும் பிள்ளைகளுக்கு கொடுக்காது நல்ல நல சுகாதார பழக்கங்களை இழந்துவிட்டனர்.

இதற்கு அடிப்படை சுகாதார உணவுப்பழக்கங்களை கருத்தில் கொள்ளாமை அறியாமை மிகமுக்கிய காரணமாகும். இதனால் உடல்நலம் குன்றிய மருந்துகளுடன் கூடியவாழ்க்கை.

மருத்துவ செலவீனங்கள் அதிகரித்தல் போன்றவற்றுடன் தமிழரின் விருந்தோம்பல் பண்பாடுகள் வீடுகளில் இல்லாது மலேசியாவில் போல் உணவகங்களிலும், திருமண விழாக்களிலும் தான் இடம்பெறும்.

விழாக்கள் வட இந்திய பண்பாட்டுத்தாக்க உடைகள் அதிகமாகி எங்களை ஒத்த முதியவர்கள் இது தமிழர் திருமணமா? மராட்டியர் கிந்திக்காரரின் திருமண விழாக்களா? என ஐயப்படும் வகையில் உடைப்பண்பாடுகள்.

சமோசா போன்ற உணவுவகை மாற்றங்களும் அதிகரித்து, தமிழர் தன்மைகள் குன்றியிருக்கும் மணவறைகள் தற்போதே மாறிவிட்டன. பாரிய இந்தியத்தாக்கம் பெற்ற நிலை நிச்சயம் இருக்கும்.

இலங்கையிலும் இங்கும் நிச்சயம் இது நிகழ்ந்திருக்கும். இது இந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் மறைமுக பண்பாட்டு தாக்கம் எத்தகையது என்று எண்ணும் நிலை காணப்படுகின்றது.

2000-3000 ஆண்டுகளில் எம் தமிழ் மொழியை, தமிழர் பண்பாட்டை மெல்ல மெல்ல மாற்றிய இந்தியத்திறன் ஒருவகையானது.

வெள்ளையர் ஆண்டதால் சிலவற்றில் தான் மாறியுள்ளோம். ஆனால் இந்தியர் கூட இருந்தும் கூடாமல் இருந்தும் மாற்றியவை பல புலம் பெயர்ந்த நாடுகளில் மிக வேகமாக நிகழும்.

ஐரோப்பாவில் வாழ்ந்தாலும் மிகக்குறைந்தவற்றில் ஐரோப்பியராகவும், மிகக்கூடியவற்றில் இந்தியராகவும் மாறிப்போய் இருப்போம்.

திரையுலகத்தாக்கம் இன்னும் வெகுவாக பாதித்திருக்கும். அதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிகின்றன. அதற்கான செலவீனங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் சந்திக்க வாய்ப்புகள் உண்டு.

காரணம் சமைக்கத் தெரிந்தவுடன் உணவகங்களை நடத்த வெளிகிட்டு ஏனைய துறைகள் தெரியாமல் தோல்வி கண்டது போல் கூட்டு கலவைகள் சார்ந்த துறைகளில் அனைத்து வகைப்பட்ட துறைகளிலும் நாம் வளர முனையவில்லை. இந்த 30-40 ஆண்டுகளில் எவராவது ஒலியியல் கற்றதற்கான ஆதாரங்கள் இல்லை.

இரண்டாம் தலைமுறையினர் பெற்றோருடன் நீண்டகாலம் வாழ்ந்ததால் இவர்களிடம் சில குறைபாடுகள் இருந்தாலும், தமிழ்பண்பாட்டு விழாக்களில் வேட்டி கட்டுதல் போன்ற வெளித்தோற்றப்பண்பாட்டில் அதிக அக்கறை கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள்.

பெண்களும் அப்படித்தான் இவர்களின் பிள்ளைகள் தற்போது தமிழ் பாடசாலைகளில் கற்கின்றார்கள். இவர்களை தமிழ் உலகத்திற்குள் கொண்டு வருவதும் தமிழ் உலகத்திற்கு வெளியில் விடுவதும் என்ற பாரிய பொறுப்பினை தமிழ் பள்ளிகள் தமிழ் பாட ஆசிரியர்கள் தான் செய்யவுள்ளார்கள்.

இதை ஆழமாக மனதில் கொண்டு புள்ளிகள் பெறுதலை எண்ணாது பிள்ளைகள் தமிழில் நுழைதலை எண்ணி தமிழ்க்கல்வியை கற்பிப்பதில் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி கணினி வழியிலும் விளையாட்டு முறையிலும் மென்முறையிலும் திட்டமிட்டு தமிழ் கற்பிப்பதன் மூலமே புதியவர்களிடம் நலமான தமிழுலகை உருவாக்க முடியும்.

இதைவிடுத்து சென்னைக்காரர் பணம் பண்ண அரசியல் பண்ண ஈழ தமிழரைப் பயன்படுத்தியது போன்று இன்று புலம் பெயர்நாடுகளில் தமிழ் கல்வி ஊடாக தமது பணத்திற்கான தமிழ் கல்விக் கொள்கை வலையை விரிவுபடுத்தி வீசியுள்ளார்கள்.

அதற்குள் முதல் தலைமுறையினர் சிக்கிவிட்டார்கள். சென்னையில் எப்படித் தமிழோ அப்படியான தமிழே அதிகபணம் செலவழித்து சென்னையை எமக்குள் உட்பாச்சும் வேலைகள் ஆரம்பம். இந்த மாயமான்களை நம்பி முதலாம் தலைமுறையினர் சென்று கொண்டிருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இரண்டாம் தலைமுறையினரையும் ஈடுபடுத்தி பணக்கல்விக்குள் பலியிட்டு புதியவர்களிடம் தமிழுலகம் உருவாகும் நிலையில் எதிர்மறை நிலையை ஆகிக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து காக்கும் கடமை இன்றைய காலகட்டத்தின் அவசியம்.

புதியவர்களிடத்தில் தமிழ் உலகம் என்பது தனியே தமிழ் எழுத்து வாசிப்பு இலக்கணக்கல்வியையும் இலக்கியமும் அல்ல. அதையும் தாண்டி தமிழை விரும்பச்செய்தல்.

தமிழ் பண்பாட்டில் ஈடுபாடு கொள்ளச்செய்தல் தமிழ் மொழியை தமது வாழ்வில் பயன்படுத்தச் செய்தல் நல்வாழ்வு முறைகளை உணரச் செய்து உயர்வான வாழ்விற்கு வழிவகுத்தல். இவற்றிக்கு தமிழின அறிவியல் கருத்துகள் தமிழின் பெருமைகளை பிள்ளைகள் அறிதல் அவசியம்.

குறைந்தளவு தமிழ் கற்றாலும் நல்ல தமிழ்ச் சொற்களை வெளிநாடுகளில் கற்பதால் தமிழ் உலகம் நீண்டகாலம் பயணிக்கும்.

என்னை பொறுத்தமட்டில் மூன்றாம் தலைமுறையினரிடம் தமிழும் தமிழ் வாழ்வும் இருக்கச் செய்வது முதலாம் தலைமுறையின் திருத்தமான அத்திவாரங்களாக இருக்க வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் நல்லனவற்றை உள்வாங்கி அவர்களையும் நாம் நாமாக இருந்து கொண்டு இணைத்து வாழல் என்பன நிகழல் அவசியம்.

அவை முழுமை பெறாமலே இன்னும் உள்ளன. பாடசாலைகள் எண்ணிக்கைக்கு இருப்பதும் பாடசாலை விழாக்கள் நடப்பதும் தேர்வுகளை நடத்துவதால் மட்டும் நல்ல தமிழ்மொழியை உயர்ந்த தமிழ்வாழ்வை எதிர்காலத்தில் தந்து, தமிழை உலகில் நீண்டகாலத்திற்கு நிலை நிறுத்தும் என்று நம்பி விடாதீர்கள்.

நல்ல தமிழ்ப் பெயர்களை நாகரீகமான சிறிய பெயர்களாகப் பலவுள்ளன அவற்றில் நாட்டம் கொள்ளச் செய்தல், வீட்டில் தமிழ்பேசி வாழல், தமிழ் பாடசாலைக்கு போவதல் என்பன மட்டும் போதாது.

5-6 புள்ளிகள் எடுக்கும் எத்தனை பிள்ளைகள் கணினியில் கைத்தொலைபேசியில் தமிழ் எழுத்துகளை பயன்படுத்துகின்றார்கள்? எத்தனை தமிழ் ஆசிரியர்கள் கணினியில் தமிழ் அச்சுப்பயன்பாட்டில் உள்ளார்கள்?

திர்காலத்தில் தமிழின் வாழ்வு கணினியில் தங்கியிருக்கிறது. நான்கு மொழிகளுக்கு மேல் தெரிந்து வாழும் பிள்ளைகள் அதில் தமிழையும் நன்றாக கற்றார்கள் என்றால்.,

தமிழ் எதிர்காலத்தில் இன்னும் செழிக்கும்.மேல் சொல்லப்பட்டவை இல்லையேல் 2013 ஆம் ஆண்டுடன் ஈயாக்மொழி பேசிய ஒரே ஒரு பாட்டி இறந்ததும் அந்த மொழிபேச எவரும் இல்லை.

அந்தப்பாட்டியுடன் அந்தமொழி அழிந்தது. அந்தநிலை தமிழுக்கு வரக்கூடாது. அதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் என்னென்னவெல்லாம் கண்டுபிடிக்கவேண்டும் செய்யவேண்டும் என்று எண்ணவேண்டும்.