Jul 27

கர்ஜனைக்காக காத்திருக்கிறோம்; மீண்டு வாருங்கள் கருணாநிதி அப்பா; குஷ்பு!

தனது தந்தையாகிய கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என்று, குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களாக காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறார். இதனால் கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். நேற்று காவிரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வயது மூப்பின் காரணமாக கருணாநிதி உடல் நலிவடைந்துள்ளது. 

24 மணி நேரமும் கவனிக்கும் வண்ணம், அருகிலேயே மருத்துவர்கள் பணியில் உள்ளனர். நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, யாரும் பார்க்க வரவேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கருணாநிதி உடல்நலம் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தலைவர் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டார். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கருணாநிதி இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு, தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில், அரசியல் ஆசானும், தந்தைக்கு இணையானவருமான கருணாநிதி விரைவில் குணமடைவார். தமிழக மக்களுக்காக விரைவில் மீண்டு வருவார். அவர் நல்லெண்ணங்களின் தூதர். சீக்கிரம் நலமடையுங்கள் அப்பா. உங்கள் கர்ஜனையை கேட்க, நாங்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.