Jul 26

பின்வாங்கிய ராகுல்; திடீர் மாற்றம் ஏன்?

வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க ஆர்.எஸ்.எஸ்., பின்னணி இல்லாத எந்த ஒரு நபரையும், பிரதமர் வேட்பாளராக அறிவிக்க தயார் என காங்., தெரிவித்துள்ளது. ராகுல் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவரது இந்த திடீர் மாற்றத்துக்கு மோடியின் அதிரடியே காரணம் என தெரிய வந்துள்ளது.

லோக்சபாவில், தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில், மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை, காங்., ஆதரித்தது. அப்போது, மிக ஆவேசமாக பேசிய, காங்., தலைவர் ராகுல், பிரதமர் மோடியையும், அவர் தலைமையிலான, மத்திய அரசின் செயல்பாடுகளையும் கடுமையாக சாடினார். இதையடுத்து, மோடியை கட்டித் தழுவிய அவர், அதன் மூலம் விளம்பரம் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டார்.

அதன் பின், சபையில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சரமாரியாக பதில் அளித்து, அனைவரையும் வாயடைக்க செய்தார். மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை, அரசின் சாதனைகளை, மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு முறை கொண்டு செல்ல, தனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாகவே அவர் பயன்படுத்தினார்.

மோடியின் இந்த அதிரடியால் தான், பிரதமர் பதவி விவகாரத்தில், காங்கிரஸ் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.