Jul 26

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஒளிபரப்புச்சேவை TGTE TV அங்குரார்ப்பணம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சின் புதிய முயற்சியான ஒளிபரப்புச் சேவை TGTE TV  அங்குரார்ப்பண நிகழ்வானது 22ம் திகதி ஜூலை 2018 அன்று பிரித்தானியாவில் வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது.

Harrow Civic Centre, Station Road, Harrow, HA1 2XY எனும் இடத்தில் மாலை 4.30மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு மங்கள விளக்கேற்றல், தமிழ்மொழி வணக்கப் பாடல், வரவேற்பு நடனம், தாயகப்பாடல் மற்றும் அதிதிகளின் உரை எனும் நிகழ்ச்சிகளுடன் செவ்வனே  நடைபெற்றது.

அங்குரார்ப்பண நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் மதிப்பிற்குரிய திருமதி பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வரவேற்புரை வழங்கி சிறப்பித்திருந்தார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் மதிப்பிற்குரிய விசுவநாதன் உருத்திரகுமாரன் , ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சர்  மதிப்பிற்குரிய கனகசபாபதி ஸ்ரீசுதர்சன், ஊடகம் மற்றும் மக்கள் விவகாரங்களுக்கான அமைச்சின் முக்கிய செயற்பாட்டாளரும் அவை உறுப்பினருமான மதிப்பிற்குரிய சுதன்ராஜ் சிவகுருநாதன் ஆகியோரின் உரை அடங்கிய  காணொளிகள் இந் நிகழ்வில் இடம்பெற்றிருந்தன.

TGTE TV தொடர்பான செயற்பாடுகள், அதன் முன்னகர்வுகள், உருவாக்கப்பட்டதன் நோக்கம், எதிர்கால திட்டமிடல் என்பவை தொடர்பாக அரசவை உறுப்பினரும் TGTE TV யின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான திரு தாமோதரம்பிள்ளை முருகதாஸ் அவர்களின் உரையினைத் தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஒளிபரப்பு சேவையான TGTE TVயை IBC ஊடகத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர் திரு தினேஷ்குமார் அங்குராப்பணம் செய்து வைத்தார். மேலும் TGTE TVக்கான இணைய தளத்தை ILC ஊடகத்துறையின் சிரேஸ்ட ஒளிபரப்பாளரும் ஊடகவியலாளருமான திரு வேல் தர்மா ஆரம்பித்து வைத்தார்.

மேலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்களான திரு தவேந்திர ராஜா, திரு கனகேந்திரம் மாணிக்கவாசகர், திருமதி பாலாம்பிகை முருகதாஸ், திரு நிமால் விநாயகமூர்த்தி, திரு அய்யாத்துரை ஜெயக்குமார், திரு பத்மநாபன் மணிவண்ணன் மற்றும் திரு ஜோசப் பொன்ராஜா அன்டனி ஆகியோர் காணொளி மூலம் வாழ்த்துச் செய்திகளை வழங்கியிருந்தனர்.

இந் நிகழ்வில் பிரித்தானிய தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு வீரேந்திர சர்மா, முன்னாள் நகரபிதாவும் தற்போதைய Harrow பகுதி கவுன்சிலருமான திரு சுரேஷ் கிருஷ்ணா, Harrow பகுதி கவுன்சிலர் திருமதி சசிகலா சுரேஷ், பிரித்தானியா NLP கட்சி உறுப்பினரும் நீண்ட கால அரசியற் செயற்பாட்டாளரான திரு கிரஹாம் வில்லியம்சன் (Graham Williamson) ஆகியோர் கலந்து கொண்டு தமது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்தனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகத்துறையின் வளர்ச்சிப்படியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட TGTE TVன் முதலாவது ஒளிபரப்பு பற்றியும் எதிர்கால வளர்ச்சி பற்றியும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாவதற்கு வழிவகுத்த மாணவர் பேரவையினை உருவாக்கியவரும் நீண்ட கால தேசிய செயற்பாட்டாளருமான திரு சத்தியசீலன், ILC ஊடகத்துறையின் சிரேஸ்ட ஒளிபரப்பாளரும் ஊடகவியலாளருமான திரு ரவிசங்கர், பார்வை பத்திரிக்கை நிறுவனர் கலாநிதி ரவி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியாவிற்கான முக்கியஸ்தர் திரு ஸ்ரீவாஸ், நீண்டகால தேசிய செயற்பாட்டாளரான திரு முருகானந்தன் ஆகியோர் தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், ஊடகத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட TGTE TV அங்குரார்ப்பண நிகழ்வானது மாலை 7 மணியளவில் எழுச்சிப்பாடல் இசைக்கப்பட்டு உறுதிமொழி எடுத்தலுடன் நிறைவடைந்தது.