Jun 01

தொலைக்காட்சி விவாதத்தில் தெரேசா மே பங்கேற்காமை குறித்து காரசாரமான விவாதம்

பிரித்தானியாவில் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு நேற்றைய தினம் முதன்முதலாக இடம்பெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே பங்கேற்காதமை பெரும் விவாதத்தை தோற்றுவித்துள்ளது.

அரசியல் தலைவர்களுடன் வாதிடுவதை விட மக்களை சந்தித்து நேரடியாக அவர்களுடன் விடயங்களைப் பேச விரும்புவதாகவும் அதனால் விவாதங்களில் பங்கேற்றவில்லை என்றும் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பிபிசி இல் நேற்று நடத்தப்பட்ட மேற்படி தொலைக்காட்சி விவாதத்தில் தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின், லிபரல் ஜனநாயகக் கட்சித் தலைவர் டிம் ஃபரோன், பசுமைக் கட்சியின் துணைத்தலைவர் கரோலின் லூகாஸ், Plaid Cymru  லீனே வூட், UKIP கட்சித் தலைவர் பவுல் நுட்டால், ஸ்கொட்டிஷ் தேசிய கட்சி துணைத்தலைவர் அங்கஸ் ரொபட்ஸன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் தெரேசா மேக்கு பதிலாக உள்துறை செயலாளர் அம்பர் ரூட் பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில், தொலைக்காட்சி விவாதத்தில் தெரேசா மே பங்கேற்காதமையும் அதற்கான விளக்கமும் ஏனைய கட்சித் தலைவர்கள் மத்தியில் விமர்சனத்தை தூண்டியுள்ளது.

நேற்றைய தொலைக்காட்சி விவாதத்தில் ‘ தெரேசா மே எங்கே? அவருக்கு என்ன நடந்தது?’ என்ற கேள்விகளை தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தொடுத்திருந்தார். அதேபோன்று பசுமைக் கட்சியின் துணைத்தலைவர் கரோலின் லூகாஸ் தலைமைத்துவத்தின் முதல் விதியை காண்பிக்க வேண்டும் என்றும், தெரெசா மேக்கு நிகழ்வில் பங்கேற்பதற்கு தைரியம் இல்லை என்று ஸ்கொட்டிஷ் தேசிய கட்சி துணைத்தலைவர் அங்கஸ் ரொபட்ஸனும் தெரிவித்தனர்.

எனினும் தெரேசா மே சார்பில் விவாதத்தில் பங்கேற்றிருந்த அம்பர் ரூட் மேயின் நடவடிக்கைகளை பாதுகாப்பதற்கு கடுமையான முறச்சிகளை மேற்கொண்டிருந்தார்.