Jun 01

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 15 வயது சிறுவன்

ரொரன்ரோவின் மேற்கு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 15 வயது சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலிடோனியா வீதி மற்றும் மேற்கு இக்லிங்டன் அவனியூ பகுதியில், ஹவேர்சன் பவுல்வர்ட் மற்றும் டன்ராவன் டிரைவ்வில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 3.30 அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிகாரிகள் தகல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போது காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் குறித்த சிறுவன் காணப்பட்டார் என்றும், அப்போது அவர் சுவாசித்தவாறும், சுயநினைவுடனும் இருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

சிறுவன் உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த சம்பவத்திலேயே குறித்த சிறுவன் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.