Jun 01

பிரான்ஸ் அவசரகால சட்டத்தின் நோக்கம் தவறானது: சர்வதேச மன்னிப்புச் சபை

அமைதியான முறையில் நடத்தப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் அவசரகால சட்டத்தை பயன்படுத்துவாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பரிஸில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் குறைந்தது 130 பொதுமக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து பிரான்ஸ் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. மேற்படி அவசரகால சட்டத்தில் பொதுமக்கள் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களும் தடைசெய்யப்பட்டன. அத்துடன் உத்தரவின்றி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் சர்வதேச மன்னிப்பு சபையினால் நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையில், அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதில் இருந்து சுமார் 155 பொதுக் கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதை தடுப்பதற்காக 639 தேவையற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் இத்தகைய நடவடிக்கைகள் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆய்வாளர் ஒருவர், “தீவிரவாத அச்சுறுத்தல்களில் இருந்து பிரான்ஸ் மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அவசரகால சட்டங்கள் உருவாக்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் அவர்களுடைய உரிமைகளை கட்டுப்படுத்துவதற்கும் குறித்த சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவசரகால சட்டம் என்ற போர்வையின் கீழ், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பதற்கு நியாயமற்ற முறையில் தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் மீது பொலிஸார் அதிகளவில் தேவையற்ற முறையில் அடாவடிகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.