Jun 01

பரிஸ் உடன்படிக்கையினை கனடா தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும்: கத்தரின்

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான பரிஸ் உடன்படிக்கையினை ஏனைய நாடுகள் போலவே, கனடாவும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் என கனேடிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் கத்தரின் மக்கன்னா தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) ரொறொன்ரோவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


இதன்போது அவர் மேலும் கூறுகையில், சீனா உள்ளிட்ட உலகநாடுகள் இந்த பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆர்வமாக உள்ளன என தெரிவித்தார்.

குறித்த இந்த உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா வெளியேறக்கூடும் என்ற கவலை அதிகரித்துவரும் நிலையில், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதிமூலங்கள் குறித்து அமெரிக்க சுற்றுச்சூழல் அமைச்சருடன் தான் பலமுறை கலந்துரையாடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த உடன்பாட்டின் 90 சதவீதமானவை இன்னமும் விவாதிக்கப்படவேண்டியுள்ள நிலையில், விரைவில் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான பரிந்துரையை தாம் முன்வைத்துள்ளதாகவும் அவ்வாறான ஒரு பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் போது கனடா அதில் நிச்சயம் கலந்துகொள்ளும் என்பது மட்டுமின்றி, அதில் முக்கிய தலைமைத்துவப் பங்களிப்பினை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.