Jul 24

அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளின் " நீருக்கு நன்றி - வறியோர்க்கு உணவு" ஆடவை (ஆனி) 31, 2049 (சூலை 15, 2018.)

கடந்த ஆடவை (ஆனி) 31, 2049 (7-15-2018) அன்று நண்பகல் 11:45 மணிக்கு அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம் என அமைப்புக்கள் மூன்றும் இயற்கையோடு இணைந்து ஐம்பெரும் ஆற்றல்களுக்குத் (நிலம், நீர், நெருப்பு, வளி, வான்) தமிழரின் நன்றியுணர்வைக் காட்டிடும் வகையாக “நீருக்கு நன்றி” என 2018 ஆண்டின் நான்காவது 'வறியோர்க்கு உணவு" நிகழ்வைநடத்திட்டன. 

காலங்கள் பலவென்று கடந்து விட்டாலும் தம் நெஞ்சில் வள்ளுவப் பெருந்தகையைத் தாங்கி அவரின் மறை கூறிட்ட,  

"இலனென்று எவ்வம் உரையாமை ஈதல் 

குலமுடையான் கண்ணே உள"

"அற்றா ரழிபசி தீர்த்தல் அஃதொருவன் 

பெற்றான் பொருள் வைப்புழி"

சொல்லருமை உணர்ந்து, மதித்து தமிழ்ச்சிறார்கள்  பிரின்டெட், இராசு, துருவேசு, தனஞ்செயன் ஆகியோர் தம் பெற்றோர்களுடன் திருவாட்டி. ஞானப்பிரியா, இராசி, திரு. கணேசன், சாக்ரடீசு, பார்த்திபன் மற்றும் பாபு ஆகியோரும் வறியோர்க்கு உணவு நிகழ்வினை குறையின்றி நிறைவேற்றி வைத்தனர்.

கோடைக்காலத்திற்கே உரித்தான அலுவல்களும், பொழுதுபோக்குகளும் தம்மை ஆக்கிரமித்து கொண்டிருந்த போதிலும் சூலை 15தனை தமக்கு அமைந்த நேர இடர்பாடுகளிடையேயும் இந்தப் புனிதமான பணிக்குச் செலவிட்ட தன்னார்வுத் தொண்டர்களை அமைப்புக்கள் பாராட்டின.

வறியோர்க்கு உணவுடன் ஒவ்வொரு உள்ளத்திலும் உள்ளடங்கியுள்ள எழுச்சிதனை தட்டி எழுப்பியும், மனதிற்கு தெம்பும், ஆறுதலையும் தரக்கூடிய "நம் வழிகாட்டி” திருவள்ளுவரின் 

1. சொல்வன்மை

2. இடுக்கண்ணழியாமை 

3. ஊக்கமுடைமை

4. மடியின்மை

குறட்பாக்கள் அதிகாரங்கள் நான்கின் விளக்கமும், தமிழர் தமது வாழ்வாதரத்திற்கு “நன்றி, அதுவும் இயற்கைக்கு நன்றி” என்பதனை  எங்ஙனம் வரவேற்கின்றோம் என்பதன் விளக்கமும் கூறி, நம் தமிழர் மண்ணின் பெருமையை மிகவாகக் கூறிச் சென்ற பழம்பெரும் வெளிநாட்டறிஞர்கள் 'மெகசுதுமசு, பான் கோன், சிரம்போ, பெரிபுலசு, சுவான் லின், யுவான் சுவாங்" போன்றோர் சிறப்புரைகள் அடங்கிய சிறு தொகுப்புப் புத்தகமும் அளிக்கப்பட்டது.

நற்பகல் உணவிற்குக் கூடியிருந்த “வறியோர்” வழங்கிய வாழ்த்துக்களைத் தம் வாழ்நாளின் அமைந்த பெரும்பேறெனத் தாங்கி நின்ற,  தமிழ் கற்கும் மாணக்கர்களும், அவர்தம் பெற்றோர்களும், 

கூடியிருந்தோருக்கும், தமது செயற்பாட்டிற்கு உதவிய “எயெசுடு (Hesed)” நிறுவனத்தின் அன்றைய நாள் உணவு பொறுப்பாளர் “திரு. யூகோ” அவர்கட்கும்,   நிகழ்வு ஏற்பாடு செய்த அமைப்புக்கள் நன்றி கூறி நிகழ்ச்சியை முடித்தனர்..