Jul 23

'பிரதமருக்கு பெருகும் ஆதரவை தடுக்கவே வன்முறை'

''பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்களிடம் அதிகரித்து வரும் ஆதரவை தடுக்கும் நோக்கில்தான், அடித்துக் கொலை சம்பவங்கள், திட்டமிட்டு நடத்தப்படு கின்றன,'' என, மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர், அர்ஜுன் ராம் மெஹ்வால் கூறினார்.

சந்தேகத்தின் அடிப்படையில், யாராவது ஒருவரை, மாடு கடத்த வந்ததாகவும், குழந்தைகளை கடத்த வந்ததாகவும், பொதுமக்கள் ஒன்று திரண்டு, அடித்து கொலை செய்யும் சம்பவங்கள், சமீபகாலமாக அதிகமாக நடக்கின்றன. முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில், மாடுகளை திருட வந்ததாக சந்தேகித்து, நேற்று முன்தினம், ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.

இதுகுறித்து, மத்திய இணை அமைச்சரும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, பா.ஜ., மூத்த தலைவருமான, அர்ஜுன் ராம் மெஹ்வால் கூறியதாவது: பிரதமர் மோடிக்கு, மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைப் பார்த்து எதிர்க்கட்சியினர், அச்சம் அடைந்துள்ளனர். பீஹார் சட்டசபை தேர்தலின் போது, 'கர் வாப்சி' எனப்படும், தாய் மதம் திரும்பும் பிரச்னையை எழுப்பினர். 

விரைவில், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், யாராவது ஒருவரை அடித்துக் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரிக்கும் என்பது நிச்சயம். நாடு முழுவதும் உள்ள மக்களிடம், பிரதமர் மோடிக்கு உள்ள ஆதரவை குறைக்க வேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு நடத்தப்படும் சதிச் செயல் இது. இவ்வாறு அவர் கூறினார்.