Jul 21

பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவது எப்படி? காங்கிரஸ் தேசிய செயற்குழு நாளை ஆலோசனை

பாராளுமன்ற பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளுங்கட்சியான பா.ஜ.க. ஏற்கனவே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது. அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.வை பலப்படுத்தும் வகையில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வரும் பிப்ரவரி மாதத்துக்குள் 100 எம்.பி. தொகுதிகளில் 50 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற ஏற்பாடு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பாராளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக நேற்று கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. விவாதத்தின்போது ராகுல்காந்தியின் உரை, மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே வேகத்துடன் பாராளுமன்றத் தேர்தல் பணிகளை முடுக்கிவிட ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தும் வழிமுறைகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளார். 

இந்த கூட்டத்திற்குப் பிறகு மாநிலம் வாரியாக பாராளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.