Jul 21

சம்பந்தன் எதை செய்துள்ளார்? எந்த தகுதியும் அற்றவர்! பஸில் குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிளவு குறித்து கவலைப்படுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எந்த தகுதியும் அற்றவர் என பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் தேர்தல் மற்றும், சுதந்திரக்கட்சி தொடர்பில் அண்மையில் இரா.சம்பந்தன் வெளியிட்ட கருத்து தொடர்பில் விபரிக்கும் போதே பஸில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் இது குறித்து கூறுகையில்,நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு சம்பந்தன் எதை செய்துள்ளார்?சுதந்திரக்கட்சியின் நிலை குறித்து கவலைப்படும் விதத்தில் பேசுகின்றார். ஆனால் அப்படி பேசுவதற்கு அவருக்கு எந்த அருகதையும் இல்லை.

சுதந்திரக்கட்சி அழிவடைகின்றது என்று கவலைப்படும் சம்பந்தன், சமஷ்டிக்கட்சியை அழித்ததை மறந்துவிட்டாரா?தேர்தலை பிற்போடும் அரசாங்கத்திற்கு சம்பந்தன் ஆதரவு வழங்கி வருகின்றார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளை மஹிந்த ராஜபக்ஸவே மீண்டும் ஆரம்பித்தார்.ஆனால் தற்போது கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு நீண்ட நாளாகின்றது.

வடக்கு மாகாண சபையும் சில தினங்களில் கலைக்கப்பட உள்ளது.நாம் பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் பெற்றுக்கொடுத்த மாகாண சபைகளை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்து வருகின்றது.சம்பந்தனை நம்பிய வடக்கு கிழக்கு மக்கள் இன்று ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் எனவும் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.