Jul 21

ஏழைகளின் துயரத்திலும், நாட்டின் வளர்ச்சியிலும் நாங்கள் கூட்டாளி : மார்தட்டி பேசிய மோடி

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். பாரதிய ஜனதா அரசு மீது நம்பிக்கை வைக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசின் மீதுள்ள நம்பிக்கையை உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்மறை அரசியலை அம்பலப்படுத்திவிட்டன என்று கூறினார். அதிகாரத்தில் அமர வேண்டியது யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று பேசினார். மக்களின் ஆதரவோ, உறுப்பினர் பலமோ இல்லாமல் தீர்மானம் கொண்டுவந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

மோடி ஒழிக என்பதே எதிர்க்கட்சிகளின் ஒரே திட்டமாக உள்ளது என பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். 125 கோடி மக்கள் மட்டுமே தம்மை பதவியில் இருந்து அகற்றமுடியுமே தவிர வேறு யாரும் அல்ல என்று பேசினார்.

தம்மை பதவியில் இருந்து அகற்ற ஏன் அவசரம் என்றும், ஜனநாயகத்தில் பொறுமை தேவை என்றும் கூறினார். தேசிய பாதுகாப்புடன் காங்கிரஸ் கட்சி விளையாட வேண்டாம் எனவும் மோடி பேசினார். பிரதமர் பதவிக்கு ராகுல் ஏன் அவசரப்படுகிறார் என வினவிய மோடி, தோல்வியடையும் என தெரிந்தே எதிர்கட்சிகளால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார்.

சாதனைகளை விளக்கி மோடி பேச்சு

மத்திய அரசு பயிர்க்காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது என்று பிரதமர் பேசினார். 2022க்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க பாஜக அரசு விரும்புகிறது என்று தெரிவித்தார். 13 கோடி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஏழைகளையும் விவசாயிகளையும் முந்தைய அரசு புறக்கணித்தது என்று மோடி கூறினார்.

ரபேல் விமான ஒப்பந்த விவரங்களை எதிர்க்கட்சிகள் திரித்து கூறுவதாக புகார் தெரிவித்தார். முத்ரா திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்க மத்திய அரசு கடன் வழங்கியுள்ளது.

ராகுல் புகாருக்கு பதில்;

தொழிலதிபர்களின் கூட்டாளி என ராகுல் புகாருக்கு பதில் தெரிவித்த மோடி ஏழைகளின் துயரத்திலும், நாட்டின் வளர்ச்சியிலும் நாங்கள் கூட்டாளி என தமது மார்பில் தட்டி பேசினார்.