Jul 20

காந்தியின் 150-வது பிறந்த நாளில் ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையாட்டி நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுள் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடியது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு, வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தியின் 150-வது பிறந்த நாளை ஆண்டு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படஉள்ளது.

இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் 55 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட ஆயுள் கைதிகள் தங்களது தண்டனை காலத்தை பாதி கடந்தவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் பயங்கரவாதம், கற்பழிப்பு, ஆட்கடத்தல், கடுமையான கிரிமினல் குற்றம் புரிதல், கொலை குற்றம், தடா மற்றும் பொடா சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்கள், வரதட்சணை கொடுமை, பெண்களுக்கெதிரான வன்முறை, பண மோசடி, பொருளாதார குற்றம் புரிந்தவர்கள் போன்ற குற்றங்களின் கீழ் சிறை தண்டனை பெற்றவர்கள் விடுதலை பெற தகுதியற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் சிறப்பு பொது மன்னிப்பு பிரிவின் விடுதலை பெற தகுதியுள்ள கைதிகள் பற்றி தகவலை அளிக்குமாறு மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளது.

தகுதி பெற்ற கைதிகள் மூன்று கட்டங்களாக விடுதலை செய்யப்பட உள்ளனர். முதல்கட்டமாக வரும் அக்டோர் 2-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 2019-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதியும், மூன்றாம் கட்டமாக 2019-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி விடுதலை செய்யப்படுவர்.இவ்வாறு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.