May 31

இரண்டாம் உலகப் போர் காலக் குண்டுகள் வெடிப்பு

பாவித்த பொருட்களை விற்பனை செய்யும் சந்தையொன்றிலிருந்து வாங்கப்பட்டு தனியார் வாகனத் தரிப்பிடமொன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இரண்டாம் உலகப் பேர் காலக் குண்டுகள் அதி வெப்பமான காலநிலை காரணமாக வெடித்ததால் பெரும் பதற்றநிலை ஏற்பட்ட சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

பொன் நகரின் கிழக்கேயுள்ள ஹென்னப் பிராந்தியத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தையடுத்து அந்தக் குண்டுகள் வைக்கப்பட்டிருந்த வாகனத் தரிப்பிட கட்டடம் தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனையடுத்து அந்தப் பிராந்தியத்திலிருந்த சுமார் 70 பேர் பாதுகாப்புக் கருதி வீடுகளை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள்.

51 வயதான நபர் ஒருவரே இந்தக் குண்டுகளை பாவித்த பொருட்களை விற்பனை செய்யும் சந்தையிலிருந்து வாங்கி தனது வாகனத் தரிப்பிடத்தில் களஞ்சியப்படுத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் அபாயகரமான குண்டுகளை வைத்திருந்து சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அந்நபர் பிராந்திய அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

மேற்படி குண்டு வெடிப்பு சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.