Jul 19

நான் சுதந்திரமாக செயல்பட ராகுல்காந்தி அனுமதித்துள்ளார்- குமாரசாமி

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநில வளர்ச்சிக்கு 3 திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். அதில், முதன்மையானது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது. இதற்காக வடக்கு கர்நாடகாவில் 7 மாவட்டங்களை அடையாளம் கண்டுள்ளேன். இது தவிர, மேலும் 3 மாவட்டங்களும் அதில் உள்ளது.

இங்கு பல்வேறு உற்பத்தி தொழில்களை உருவாக்கலாம் என்று திட்டமிட்டு உள்ளோம். சீனாவை போல் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான தொழிலை தொடங்க இருக்கிறோம்.

இதற்காக வரும் 5 ஆண்டுகளில் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்யப்படும். இதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அடுத்ததாக நீர்ப்பாசன திட்டத்தில் முக்கிய கவனம் செலுத்த இருக்கிறேன். விவசாயிகள் கடன் தள்ளுபடி இடைக்கால நிவாரணமாக இருக்குமே தவிர, நிரந்தர தீர்வு ஆகாது.

விவசாய உற்பத்தி முறைகளை மாற்றி அமைத்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.என்னை ஏன் விமர்சிக்கிறார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வெளியிடும் கருத்துக்கள் என்னை விமர்சிப்பவை அல்ல. அவை அவருடைய அனுபவத்தின் அடிப்படையில் எனக்கு வழங்கும் ஆலோசனையாக ஏற்றுக்கொள்கிறேன்.

அவர் என்ன ஆலோசனை வழங்கினாலும் அதை நான் வரவேற்கிறேன். ராகுல்காந்தியை பொருத்த வரை என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதித்துள்ளார். இந்த வி‌ஷயத்தில் நான் அதிர்ஷ்டக்காரன். அவரது பெயரை நான் தவறாக பயன்படுத்தமாட்டேன்.

மேலும் அவரிடம் மற்ற காங்கிரசாரைப்பற்றி விவாதிக்கவும் நான் விரும்பவில்லை. காங்கிரஸ் மேலிட தலைவர்கள் யாரும் எனது ஆட்சியில் தலையிடவில்லை. உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களும் எனக்கு மிகவும் ஆதரவாக உள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலை பொருத்த வரையில் தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்சினையும் எழாது. எங்களுக்குள் ஒருமித்த கருத்து உள்ளது.