Mar 14

இனி தந்தையாலும் உணர முடியும்

ஆரோக்கியம் குறித்து கணவனுக்கு இன்னும் அதிகமான ஈடுபாடு இருக்க வேண்டும் என்பதற்காக டென்மார்க்கைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று ஸ்மார்ட் பிரேஸ் லெட்டை உருவாக்கி யிருக்கிறது.

வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை யின் நகர்தல், உதைத்தல் போன்றவற்றை உடனுக் குடன் அப்பாவும் இந்த பிரேஸ்லெட் மூலம் உணர்ந்துகொள்ள முடியும். நடைப் பயிற்சிக்காகத் தற்போது கையில் அணியக்கூடிய பிரேஸ்லெட்டைப் போலவே Fibo பிரேஸ்லெட்டும் உருவாக்கப்பட்டிருந்தாலும் இதன் நோக்கம் முற்றிலும் மாறுபட்டது.

தாயின் வயிற்றுப் பகுதியில் ஒரு கண்காணிப்புக் கருவி இணைக்கப்பட்டிருக்கும். அந்தக் கருவியிலிருந்து பிரேஸ்லெட்டுக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டிருக்கும். குழந்தையின் அசைவுகளை மிகத் துல்லியமாக இந்த பிரேஸ்லெட் தந்தைக்கு உணர்த்திவிடும். அருகில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பரிசோதனைகளின்போது ஏராளமான ஆண்கள் தங்கள் குழந்தையின் அசைவுகளை உணர்ந்து, இதயத் துடிப்பை அறிந்து பரவசப்பட்டிருக்கிறார்கள்.

“இதுபோன்ற உணர்வுகளை நான் இதுவரை பெற்றதில்லை. வார்த்தைகளில் சொல்ல முடியாத சந்தோஷம், பரவசம் உண்டாகியிருக்கிறது. ஃபிபோ பிரேஸ்லெட் அணிந்த பிறகு குழந்தையின் மீது மட்டுமல்ல, மனைவியின் மீதும் அன்பும் மதிப்பும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது” என்கிறார் ஒரு தந்தை. கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபிபோ பிரேஸ்லெட், மேலும் சில பரிசோதனைகளுக்குப் பிறகு 2018-ம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது. விலையைப் பற்றி தகவல் இல்லை.

கர்ப்பத்திலிருந்துக்கும் குழந்தையின் அசைவுகளை இனி தந்தையாலும் உணர முடியும்!