Jul 18

பிரான்ஸில், கறுப்பு மனிதரின் வெள்ளை மனம்!

பிரான்ஸ் இளம் சூப்பர்ஸ்டார் கிலியன் எம்பாப்பே, உலகக்கோப்பை சம்பளம் முழுவதையும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் நலனுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். 

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் அணி குரோஷிய அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரின் சிறந்த இளம் வீரராக பிரான்ஸ் முன் கள வீரரான 19 வயது கிலியன் எம்பாப்பே தேர்வுசெய்யப்பட்டார்.

இந்த உலகக் கோப்பை போட்டி முழுவதும், கிலியன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு, 4 கோல்களையும் அடித்தார். கிலியன், உலகக்கோப்பைத் தொடரில் விளையாடியதன் மூலம் தனக்குக் கிடைத்த சம்பளம் மற்றும் போனஸ் தொகை ரூ. 3.50 கோடியை விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுவரும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் நலனுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்

உலகக்கோப்பையில் ஒரு ஆட்டத்தில் விளையாட 17 ஆயிரம் பவுண்டுகள் அவருக்கு சம்பளமாகக் கிடைக்கும். அதன்படி கிலியனுக்கு, 7 ஆட்டங்கள் மூலம் சம்பளம் மற்றும் போனஸாக 2,65,000 பவுண்டுகள் கிடைத்தது.

கிடைத்த தொகையை நல்ல விஷயத்துக்காகப் பயன்படுத்த முடிவுசெய்த எம்பாப்பே குழந்தைகள் நலனுக்கு செலவிட முடிவுசெய்தார்.

சமீபத்தில், மொனாக்கோ அணியிலிருந்து எம்பாப்பேவை பரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 135 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம்செய்தது.

ரியல்மாட்ரிட் அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ விலகி யுவான்டஸ் அணியில் இணைந்ததால், ரொனால்டோ இடத்தில் எம்பாப்பேவை கொண்டுவர மாட்ரிட் அணி முயன்றுவருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் இதற்கு இணங்காமல், தொடர்ந்து பி.எஸ்.ஜி அணியில் விளையாடப்போவதாக எம்பாப்பே கூறியுள்ளார்.

சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய எம்பாப்பேவை ‘கறுப்பு மனிதரின் வெள்ளை மனம் ‘ என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். உலகிலேயே அதிக மதிப்புள்ள கால்பந்து வீரர்களில் தற்போது, நெய்மருக்கு அடுத்தபடியாக இவர் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.