Jul 18

வருமான வரித்துறை சோதனை மூலம் தமிழகத்தில் ஆட்சியை கலைக்க பாஜ அதிரடி திட்டம் : திருமாவளவன்

தமிழகத்தில் தொடர்ந்து நடைெபறும் வருமான வரித்துறை சோதனை மூலம் தமிழகததில் ஆட்சியை கலைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை- சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை எதிர்த்து, திருவண்ணாமலையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்ட, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:

நல்ல பல திட்டங்களை எல்லாம் வட மாநிலங்களுக்கு கொண்டுசெல்லும் மத்திய அரசு, இந்தியாவின் 2வது பசுமை வழிச்சாலையை 10 ஆயிரம் கோடி செலவில் தமிழகத்தில் சென்னை- சேலம் இடையே கொண்டுவருவதன் நோக்கம் என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். மாநில அரசை முடக்கிவிட்டு, மத்திய அரசு நேரடியாக செயல்படுவது ஜனநாயக விரோத செயல்.

பசுமை வழிச்சாலை திட்டத்தை ரஜினிகாந்த் ஆதரித்து பேசுவது அதிர்ச்சி தரக்கூடியது இல்லை. தொடர்ந்து அவர் ஆளும் கட்சிக்கு, மத்திய அரசுக்கு ஆதரவாக பேசிவருகிறார். தமிழகத்தில் ஊழல் நிறைந்துள்ளது என பாஜ தலைவர் அமித்ஷா பேசியதில் அரசியல் உள்ளது.

ஆனால், இதுவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து சொல்லவில்லை. முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடைவெளியை ஏற்படுத்தி, தமிழக அரசை பலவீனப்படுத்த, நெருக்கடி கொடுக்க பாஜ முயற்சிக்கிறது.

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் வருமான வரித்துறை சோதனையில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. தமிழக அரசுக்கு பதற்றத்தை உருவாக்குகின்றனர்.

முதல்வருக்கும், பிரதமர் மோடிக்கும் இணைக்கமான நிலை இப்போது இல்லை. வருமான வரித்துறை அதிரடி சோதனை மூலம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற அல்லது தமிழக அரசை கலைக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. திமுகவுடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் இயங்கி வருகிறது.

இந்த கூட்டணியில் குழப்பத்தை, தடுமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், காங்கிரசுடன் கூட்டணி என பாமக ேபசிவருகிறது. வரும் தேர்தலில் 3வது அணி அமைவது, தமிழகத்துக்கும், நாட்டுக்கும் நல்லது இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.