Jul 18

மூன்றாவது ஒருநாள் போட்டி - மோர்கன், ரூட் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்திய அணியின் ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா - தவான் ஜோடி ரன்கள் குவிக்க திணறியது. இதனால், முதல் ஐந்து ஓவர் முடிவில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தது.

18 பந்தில் 2 ரன்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில் வில்லே பந்துவீச்சில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் இருவரும் நிதானமாக விளையாடி சீரான வேகத்தில் ரன்களை குவித்தனர். 

17.4 வது ஓவரில் இந்தியா இரண்டாவது விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவான் 44 ரன்களில் அவுட் ஆனார். இதன்பின்னர் விராட் கோலியுடன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். தினேஷ் கார்த்திக் 21 ரன்களில் அவுட் ஆனார். டோனியுடன் விளையாடிய விராட் கோலி 71 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த ரெய்னா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா 21 ரன்களும், டோனி 66 பந்தில் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். புவனேஸ்வர் குமார் (21), சர்துல் தாகூர் (13 பந்தில் 22 ரன்கள்) ஓரளவிற்கு விளையாட இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 257 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணி சார்பில் ரஷித் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். அடுத்த வருடம் இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடருடன் அந்த அணி தொடர்ச்சியாக 8 தொடர்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.