May 31

மஞ்செஸ்டர் தாக்குதல்தாரி வெடிகுண்டு பாகங்களை தானே கொள்வனவு செய்துள்ளார்: பொலிஸார்

மஞ்செஸ்டர் தாக்குதல்தாரி சல்மான் அபேடி, குறித்த தாக்குதலுக்கான வெடிகுண்டை தயாரிப்பதற்கான பாகங்களை தானே கொளவனவு செய்து தயாரித்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி தாக்குதல்களுக்கு சுமார் நான்கு தினங்களுக்கு முன்னர்வரை அபேடியின் செயற்பாடு தன்னிச்சையாகவே காணப்பட்டதாக வட மேற்கு தீவிரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவர் ரஸ் ஜெக்சன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அபேடி, பரந்த தீவிரவாத வலையமைப்புடன் தொடர்புபட்டுள்ளாரா என்பது தொடர்பில் தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மஞ்செஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மூவர் எவ்வித குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படாது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மஞ்செஸ்டர் தாக்குதலுக்கு முன்னரான, அபேடியின் செயற்பாடுகள் குறித்து கண்காணிப்பு கெமராக்களின் ஆதாரம் மற்றும் அவர் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகள் என்பவற்றை மையமாகக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.