Jul 17

துரோகத்தை கருவறுத்து அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவோம் : பெங்களூருவில் டிடிவி.தினகரன்

தமிழகத்தில் துரோகத்தை கருவறுத்து மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவோம் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூரு  பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள தண்டனை கைதி சசிகலாவை பார்த்த பின்னர், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அம்மா மக்கள்  முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டால்  நலமாக இருக்கும். அதைத்தான் மக்கள் விரும்புகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 37 இடங்களை கைப்பற்றும்.  அதில் 25 இடங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சிக்கு கிடைக்கும்.

மீதமுள்ள இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு கிடைக்கும். தமிழகத்தில் துரோக  ஆட்சி நடந்து வருகிறது. துரோகத்தை வேரோடு அறுவடை செய்து மீண்டும் அம்மாவின் மகத்தான ஆட்சியை கொண்டு வருவோம். இரட்டை  இலையை மீட்டெடுப்போம். தமிழக அரசுக்கு தற்போது ஏற்பட்ட நெருக்கடி அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 

நான் ஏற்கனவே கூறியது போன்று முட்டை வடிவில்தான் வெடி குண்டு வரும் என்று கூறியிருந்தேன். தற்போது முட்டை நிறுவனங்களில் ஐ.டி  சோதனை நடைபெற்று வருகிறது. இனி அதிமுகவினர் முட்டை பிரசாரம்தான் செய்யமுடியும். 

முட்டைக்கு அடுத்தப்படியாக அதிமுகவிற்கு அடுத்த  வெடிகுண்டு தயாராக இருக்கிறது. அது எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு. அதில் நீதிமன்றம் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என்பதில் மாற்று  கருத்து இல்லை. தமிழகத்தில் திருச்சி உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படாமல் கிடக்கிறது.

மழை நேரங்களில் ஏரி,  குளங்களை தூர்வாரி அணைகள் வாயிலாக நீரை சேமித்து வைத்தால்தான் பிற்காலத்தில் நமக்கு உதவியாக அமையும். ஆனால் அதை அமைச்சர்  காமராஜிடம் கூறினால் அவர் தலைகீழாக வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார். அதே நேரத்தில் தூர்வாரப்படுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கு  செல்கிறது என்று தெரியவில்லை என்றார்.