Jul 16

நவிகோ அட்டையினை 50 வீத விலைக்கழிவுடன் பெறக்கூடியவர்களின் விபரம்!

ரயில் தொழிலாளர்களின் பணி பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பயண அட்டையில் 50 வீத விலைக்கழிவை வழங்க SNCF தீர்மானித்துள்ளது. 

நாடு முழுவதும், பணி பகிஷ்கரிப்பால் அதிகளவு பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இந்த நஷ்ட ஈடு வழங்கப்பட உள்ளது. நவிகோ அட்டை மற்றும் Imagine R பயண அட்டை வைத்திருப்பவர்களில், பாதிக்கப்பட்ட பயணிகள் அடுத்த மாத நவிகோ அட்டையில் 50 வீத விலைக்கழிவு பெற்று கொள்ளலாம். அதாவது 25 யூரோக்கள் விலைக்கழிவுடன் கூடிய கட்டணத்தில் நவிகோ அட்டையினை பெற்றுக்கொள்ளலாம்.

அதேவேளை Imagine R பயனாளர்களுக்கு 12.50 யூரோக்கள் விலைக்கழிவுடன் கூடிய அட்டையை பெற்றுக்கொள்ள முடியும்.

R வழி பயணம் மேற்கொள்ளும் அனைவரும் நஷ்ட ஈடு பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் P வழியில், Ferté-Millon இல் இருந்து Longueville-Provins வரை பயணிப்பவர்களும் நஷ்ட ஈடு பெறலாம்.

மேலும், RER D இல் Corbeil இல் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் பயணிகளும், RER E இல் Chelles-Gournay நோக்கி பயணிக்கும் பயணிகளும் நஷ்ட ஈடு பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன் N, வழி தொடரூந்தில் Mantes மற்றும் Dreux நகரங்களுக்கு பயணிப்பவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் Ile-de-France Mobilités இன் இணையத்தளத்தில் ஜூலை 22 ஆம் திகதிக்குள் தங்கள் விபரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.