Jul 16

தமிழிசை மீது திருமாவளவன் தாக்கு அதிமுக-பாஜ இடையேயான விரிசலை சரிகட்டவே தாய்-மகள் என்கிறார்

அதிமுக-பாஜக இடையே ஏற்பட்டுள்ள விரிசலை சரிகட்டவே தமிழிசை இருகட்சிகளும் தாயும் மகளும் போல எனக்கூறி வருகிறார்’  என்று தமிழிசையை திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் தந்தை தொல்காப்பியரின் நினைவு நாளையொட்டி, நேற்று அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த அங்கனூரில் உள்ள அவரது சமாதியில் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். இனிவரும் காலங்களில் நீட் தேர்வினால் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மத்திய அரசின் பினாமியாக உள்ள தமிழக அரசின் மீது பாஜக தலைவர் அமித்ஷா ஊழல் குற்றச்சாட்டு கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் அதிமுக-பாஜக இடையே ஏற்பட்டுள்ள விரிசலை சரிகட்டவே பாஜக தலைவர் தமிழிசை இருகட்சிகளும் தாயும் மகளும் போல எனக்கூறி வருகிறார். 

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். இக்கூட்டணி தேர்தலிலும் தொடரும். இக்கூட்டணியில் சிண்டு முடியும் வேலையில் சிலர் ஈடுபடுகின்றனர்.

சேலம் பசுமை வழிச்சாலை விவசாயிகளின் கோரிக்கைக்கு எதிராக அமைக்கப்படுகிறது. இதனை கண்டித்தும் இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் திருவண்ணாமலையில் நாளை (17ம் தேதி), சேலத்தில் 20ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.