Jul 16

வடமாகாணக் கல்விப் புலத்தில் அதிகரித்துச் செல்லும் சிறுவர் துஸ்பிரயோகங்களும் அதனை மூடிமறைத்து ஆதரவு வழங்கும் அதிகாரிகளும் கண்டுகொள்ளாத கல்வி அமைச்சரும்.

வடமாகாணக் கல்விப் புலத்தில் கட்டுப்படுத்துவதற்கு யாருமற்ற நிலையில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துச் செல்கின்றன. சிறுவர்களைப் பாதுகாப்பவர்களே சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெற்றால் அதில் பாதிக்கப்பட்ட சிறுவரைப் பற்றிச் சிறிதளவும் கருத்தில்கொள்ளாது அதனை மூடிமறைத்து சிறுவர் துஸ்பிரயோகக் குற்றச் செயலில் ஈடுபட்ட நபரை எப்படிப் பாதுகாக்கலாம் என்பதிலேயே கல்விப் புலத்திலுள்ள அதிகாரிகள் பலர் முயற்சித்து வெற்றிபெற்று வருகின்றார்கள்.

சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பாதுகாப்பது பிழை அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறி நீதி நியாயப்படி நடக்கும் அதிகாரிகள் சிலர் முயன்றபோதிலும் அவர்கள் மேலதிகாரிகள், சக அதிகாரிகளின் வற்புறுத்தல், மிரட்டல் போன்றவற்றால் தடுக்கப்பட்டும் ஒத்துழைக்க மறுத்தமைக்காகப் பழிவாங்கப்பட்டும் உள்ளார்கள்.

சிறுவர் துஸ்பிரயோகக் குற்றச் செயல்களை மாணவர்கள் மூலம் ஆதாரங்களுடன் தமது உயரதிகாரிகளுக்குத் தெரியப்படுத்திய ஆசிரியர்கள் பலர் பல்வேறுபட்ட வழிகளில் பழிவாங்கப்பட்டும் வேறு காரணங்களை முன்வைத்து அவர்களுக்குத் தொடர் தொல்லை கொடுக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் உள்ளார்கள். இதன் காரணமாக சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெற்றால் அதனை கண்டும் காணாமல் செல்லும் நிலையே தற்போது காணப்படுகின்றது.

வடமாகாணத்தில் சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவங்களே வெளிவருகின்றன. ஆனால் சிறுவர்கள் பாலியல் ரீதியாகவும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் காரணமாக உடல், உள ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ள பல சம்பவங்கள், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நன்மை கருதி என்னும் போர்வையில் மூடிமறைக்கப்பட்டு துஸ்பிரயோகக் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது, சிறுவர் துஸ்பிரயோகக் குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டு அவர்கள் தொடர்ந்தும் துஸ்பிரயோகச் செயல்களில் ஈடுபடுவதற்கான துணிவும் சந்தர்ப்பங்களும் ஏற்படுத்திக்கொடுக்கப்படுகின்றன.

யாழ்.மாவட்டத்திலுள்ள தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அங்கு தரம் 7 இல் கல்வி கற்ற 12 வயதுடைய 7 சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்ய முயன்றதை சிறுமிகள் தமது பெற்றோருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

ஆதனை பெற்றோர் உடனடியாகவே பாடசாலையின் அதிபருக்கு முறையிட்ட போது அதனை ஏற்க மறுத்த அதிபர் அதனை மூடிமறைத்து துஸ்பிரயோகக் குற்றவாளியான ஆசிரியரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். அதனை எதிர்த்து ஏற்க மறுத்த பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் வடமாகாணத்திலுள்ள அதிகாரிகளை நம்பாது கொழும்பிலுள்ள தேசிய சிறுவர்பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டதனையடுத்தே குற்றவாளியான ஆசிரியர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அதிபரால் மூடிமறைத்து குற்றவாளியைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சி அங்குள்ள பெற்றோர் படித்தவர்கள் என்பதாலும் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நின்றமையலும் துஸ்பிரயோகக் குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் விடயம் விளங்காத படிக்காத பாமரப் பெற்றோருள்ள பல கிராமப்புறப் பாடசாலைகளில் நடைபெறுகின்ற சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளால் மூடிமறைக்கப்பட்ட வண்ணமே உள்ளன. சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிராகக் குரல்கொடுக்கின்ற ஆசிரியர்களும் வேண்டுமென்றே பல வழிகளிலும் பழிவாங்கப்பட்டு வருகின்றார்கள்.

சில பாடசாலைகளில் மாணவர்கள் மீது நிகழ்த்தப்படும் சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிராகக் குரல்கொடுத்த பல ஆசிரியர்கள் அதிபராலும் குற்றம் புரிந்த ஆசிரியராலும் அவருக்குச் சார்பான ஆசிரியர்களாலும் அதிகாரிகளாலும் துஸ்பிரயோகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த ஆசிரியர் மீது வேறு வகையான குற்றச்சாட்டுக்களை உருவாக்கி பழிவாங்குவதுடன் அவர்களை பைத்தியம் என்று கூடக் கூறி அவமானப்படுத்திய சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. இவை வெளிவராமல் இருந்து வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி என்னும் இடத்தில் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு பாடசாலையில் அங்கு சமய பாடம் கற்பித்த ஆசிரியர் ஒருத்தர் மாணவிகள் சிலரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளதனை பாதிக்கப்பட்ட மாணவிகள் தமக்கு நம்பிக்கைக்குரிய பெண் ஆசிரியைகளிடம் தெரியப்படுத்தியுள்ளார்கள். அதனை அந்த ஆசிரியைகள் அப்பாடசாலை அதிபரிடம் கூறியுள்ளார்கள்.

அதற்கு அப்பாடசாலையின் அதிபர் அந்த ஆசிரியைகளைக் கடுமையாகக் கடிந்துகொண்டதுடன் தமது பாடசாலையின் நற்பெயரைக் கெடுப்பதற்காகவும் ஒரு நல்ல சமய ஆசிரியர் மீது அபாண்டமான வீண் பழி போடுவதற்காகவும் அந்த ஆசிரியைகள் திட்டமிட்டுச் செயற்படுவதாக கூறி அந்த ஆசிரியைகள் கூறியதை ஏற்க மறுத்து நிராகரித்து அவர்களைக் கடுமையாக எச்சரித்து அனுப்பியிருந்தார். அப்பாடசாலையில் அந்த ஆசிரியரால் பாதிக்கபட்டு வரும் மாணவிகள் மீண்டும் அப்பெண்ணாசிரியைகளிடம் முறையிட்டுள்ளதனைத் தாங்கிக்கொள்ள முடியாத அவர்கள் மீண்டும் அதே சம்பவத்தை அதிபரிடம் கூறியிருந்தார்கள்.

அப்போதும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த அதிபர் அதனை எழுதி எழுத்து மூலம் அவ்வாசிரியைகளைக் கையொப்பமிட்டு உறுதிப்படுத்தித் தருமாறு கேட்டுள்ளார். மேற்படி குற்றச்சாட்டை எழுதி ஆசிரியைகள் கொடுத்த சந்தர்ப்பத்தில் மாணவிகளால் குற்றம் சாட்டப்பட்ட சமய பாட ஆசிரியர் மீது விசாரணையோ, நடவடிக்கையோ ஏதுமின்றி கல்வித்திணைக்களத்திலுள்ள உயரதிகாரிகளது ஆதரவுடன் வேறு பாடசாலை ஒன்றுக்குத் திடீரென இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். இச்சம்பவம் கடந்த மூன்று மாதகாலப் பகுதியினுள் இடம்பெற்றுள்ளது. 

தற்போது அந்தக் குற்றச்சாட்டுக்குரிய சமய பாட ஆசிரியர் இடமாற்றம் பெற்று வேறுபாடசாலைக்குச் சென்றுள்ளமையால் சீற்றமடைந்த அதிபர், பாதிக்கப்பட்ட மாணவிகளின் வாக்குமூலத்தில் முறைப்பாட்டினைத் தெரிவித்த ஆசிரியைகளை, ஆசிரியைகள்தான் அந்த நல்ல ஆசிரியர் மீது இப்படியான அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்து அந்த நல்லாசிரியர் வேறுபாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லக் காரணமாக இருந்துள்ளீர்கள் எனக் குற்றம்சாட்டி அவர்களுக்கு கடும் நெருக்கீடு கொடுத்து வருவதாகக் கூறப்படுகின்றது. கல்வித் திணைக்கள அதிகாரிகளே துஸ்பிரயோகக் குற்றச்சாட்டுள்ள ஆசிரியரைப் பாதுகாப்பதற்காகச் செயற்பட்டுள்ளமையால் அந்த ஆசிரியைகள் மிகவும் பயந்த நிலையில் உள்ளதாக அறிய முடிகின்றது.

இதேவேளை இராமநாதபுரம் பாடசாலையில் கல்வி கற்பித்த வர்த்தக பாட ஆசிரியர் ஒருத்தர் 9ம் வகுப்பு மாணவி ஒருத்தியைத் பாடசாலையின் தனியான ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று அச்சிறுமியை தன்னுடன் படுக்க வருமாறு வெளிப்படையாகவே கேட்டு வற்புறுத்தியுள்ளார். இதனால் பயந்த சிறுமி அங்கிருந்து தப்பியோடி அதிபரிடம் சென்று முறையிட்டிருந்தாள். அதனை அதிபர் கிளிநொச்சி கல்வித் திணைக்களத்திற்குத் தெரியப்படுத்திருந்தார்.

இச்சம்பவமும் அரசியல் பின்புலத்துடன் மூடிமறைக்கப்பட்டு அதனால் அவர் தற்போது கிளாலியிலுள்ள பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். இச்சம்பவம் ஒரு சிறிய சம்பவம் எனவும் அதிபர் இதனைப் பெரிதுபடுத்தாது தனது ஆளுமையைப் பயன்படுத்திப் பாடசாலையுடன் தீர்த்திருக்கலாம் எனவும் அதிபர் அவசரப்பட்டு கல்வித் திணைக்களத்திற்கு முறையிட்டுள்ளதாக சிலதரப்பினரால் அதிபர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதே போல வடமாகாணத்திலுள்ள இன்னொரு வித்தியாலயத்தில் ஆசிரியர் ஒருவர் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வருவதை அவதானித்த ஆசிரியர் இருவர் அது தொடர்பில் அதிபரிடம் முறையிட்டபோது அதனைக் காதில் கேட்காதது மாதிரி இருந்த அதிபர் அந்த ஆசிரியர்களை நோக்கி உங்களுக்கு இதுதானோ வேலை? உங்களுக்கு வேறு வேலையில்லையோ? என அப்படி ஏதாவது நடந்தால் அதை ஒழுக்கக் குழு பொறுப்பு ஆசிரியர்கள் பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்த்தால் போதும் என கடும் தொனியில் கூறியுள்ளார்.

பாதிக்கப்படும் சிறுமிகளுக்காக மீண்டும் அந்த ஆசிரியர்கள் அதிபரைச் சந்தித்து இது பற்றிக் கூறிய போது அதிபர் தனது ஐந்து விரல்களையும் காண்பித்து இதிலுள்ள ஐந்து விரல்களும் ஒரேமாதிரி இருக்கின்றனவா? கையிலுள்ள ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என நாம் நினைப்பது முட்டாள்தனம். ஆனால் இந்த ஐந்து விரல்களும் எமக்கு முக்கியம். அதே போலத்தான் அவரும் எமக்கு முக்கியம். அவர் எப்படியென்றாலும் இருந்துவிட்டுப் போகட்டன்.

அது அவருக்குரிய பேர்சனல். இது உங்களுக்குத் தேவையில்லாத ஒன்று. இதை நீங்கள் எங்கு முறையிட்டாலும் அவர்களும் இது வெளிவருவதை விரும்பமாட்டார்கள். இதை நீங்கள் தூக்கிப் பிடித்து அதிகாரிகளைப் பகைத்துக் கொண்டால் பாதிக்கப்படப்போவது நீங்கள்தான். உங்களது நன்மை கருதித்தான் நான் சொல்லுறன் இதைப் பேசாமல் இப்படியே விட்டு மறந்திடுங்கள், நீங்கள் இப்பதானே இந்தத் துறைக்குள் வந்திருக்கிறியள். காலப் போக்கில் எல்லாம் சரிவரும், அப்போது சமூகத்தோடு இசைவாக்கப்பட்டு விடுவீர்கள்.

இப்ப உங்களுக்கு அனுபவம் காணாது எனக் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் ஆசிரியர்கள் அதனை ஏற்க மறுத்து முரண்டு பிடித்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியர்கள் அதிபரால் மாத்திரமல்லாமல் துஸ்பிரயோக ஆசிரியராலும் ஆசிரியர்களுக்கான பொறுப்புக்கள் அதிகரித்துத் திணிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டு வருகின்றார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகியுள்ள அந்த ஆசிரியர்கள் இவ்விடயத்தை வெளியிலும் சொல்ல முடியாத நிலையில் மிகுந்த வேதனையுடன் உள்ளார்கள். 

மற்றும் கிளிநொச்சி புலியம்பொக்கணைப் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் அப்பாடசாலையில் தங்கி நின்று பணிபுரிந்த காலப்பகுதியில் பாடசாலையிலிருந்து குறிப்பிட்ட தொலைவிலுள்ள வீடொன்றில் இரவு நேர வகுப்புக்கள் நடத்த ஒழுங்குகள் செய்து கொடுத்துள்ளார். இரவு நேர வகுப்புக்குச் செல்லும் மாணவி ஒருத்தியை மாணவியினது வீட்டுக்குச் சென்று அந்த அதிபரே இரவில் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று வகுப்பில் இறக்கி விடுவார்

மீண்டும் இரவில் ஏற்றிச் சென்று வீட்டில் இறக்கி விடுவார். அதிபர் இரவு வகுப்பு முடிந்ததும் மாணவியை சாப்பாட்டுக் கடைக்குப் போவதாகக் கூறி வேறு எங்கோ ஏற்றிச் சென்றதையும் பாடசாலையில் அம்மாணவியுடன் அதிபர் தகாக வார்தைகளில் உரையாடி வருவதையும் ஆதாரங்களுடன் அவதானித்த மாணவர்களும், பழைய மாணவர்களும் பொறுப்பான அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்காத நிலையில் அதிபருடன் நேரடியாகவே முரண்பட்டதனைத் தொடர்ந்து விடயம் மூடிமறைக்கப்பட்டு அந்த அதிபர் பத்திரமாக பளைப் பகுதிப் பாடசாலை ஒன்றுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு பாடசாலையில் மாணவி ஒருத்தியை மாணவிக்கான குறித்த பாடச் செமினார் என்று கூறிப் பொய் சொல்லி பாடசாலை நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற ஆசிரியர் ஒருத்தர் மாணவியுடன் காட்டுப் பகுதியிலுள்ள வீடொன்றில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தார். இவ்விடயம் தொடர்பிலும் மாணவியின் உறவினர்களால் குறித்த பாடசாலை அதிபருக்குத் தெரியப்படுத்தப்பட்ட போது அதனை அதிபர் முதலில் ஏற்றுக்கொள்ளாது உதாசீனம் செய்திருந்தார்.

வடமாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களிலுள்ள பல கிராமப் புறங்களில் சில பாடசாலை அதிபர்களது அனுசரணையுடன் இரவு நேர வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வகுப்புக்கள் இரவு 7.00 மணி முதல் இரவு 11.00 மணி வரைக்கும் வாரத்தில் 7 நாட்களும் நடைபெற்று வருகின்றன. இவ்வகுப்புக்களுக்குச் சில மாணவ மாணவிகள் தமது பெற்றோருடன் சென்றாலும் பலர் இரவில் தனியாகவே வீதியால் சென்று வருகின்றார்கள். இதேவேளை சில இடங்களில் அதிகாலை 3.30 மணிக்குக் கூட தனியார் வகுப்புக்கள் பலரது வற்புறுத்தல்களுக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றன. இதனால் மாணவர்கள் சுயமாகக் கற்க முடியாத நிலை காணப்படுகின்றது.

கல்விக் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட நிலையில் பணத்திற்காக மாணவர்களைப் பலியிடுவதாகக் காணப்படும் இரவு நேர வகுப்புக்களை வடமாகாணத்திலுள்ள எந்தவொரு அதிகாரியோ அல்லது மாகாணக் கல்வி அமைச்சரோ கருத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை. இவ்வகுப்புக்கள் அனைத்தும் பணம் பெறும் நோக்கம் கருதி ஆசிரியர் அல்லாத சிலராலும் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இவ்வகுப்புக்களுக்கு அனுசரணை வழங்கும் அதிபர்கள் சிலருக்கு மாதாந்தம் ஒரு தொகைப் பணம் மேற்பார்வைக்காக என்னும் பெயரில் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் அதிபர்கள் மேற்பார்வை செய்வதற்காக இரவில் செல்வதில்லை. இரவு நேர வகுப்புக்கு மாணவர்களைச் செல்லுமாறு வற்புறுத்துவதே அவர்களது பணி.

கட்டமைக்கப்பட்ட பாடசாலைகளில் பொறுப்புள்ள பலர் இருந்தும் பகல் நேரங்களிலேயே மாணவிகளுக்குப் பாதுகாப்பில்லாமல் துஸ்பிரயோகங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இரவு நேர வகுப்புக்களில் இருட்டில் என்ன நடைபெறுகின்றது என்பதே வெளியில் தெரியாமலுள்ளது. இரவில் இருட்டில் வகுப்புக்கள் நடைபெறுவதனால் கல்வி அமைச்சருக்குக்கூடத் தெரியாமலுள்ளது. 

சில தனியார் கல்வி நிலையங்கள், மத நிறுவனங்கள் பாடசாலை மாணவர்களை சுற்றுலா என்று கூறி அழைத்துச் சென்று ஐந்து ஆறு நாட்கள் பாதுகாப்பற்ற நிலையில் தங்கியிருக்கும் சந்தர்ப்பங்களும் உரிய அதிகாரிகளாலோ மாகாணக் கல்வி அமைச்சராலோ கண்டுகொள்ளாத நிலை காணப்படுகின்றது. இப்படியான சந்தர்ப்பங்களில் பல துஸ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்று வெளிவராது மூடிமறைக்கப்பட்டுள்ளன. 

கல்விப் புலத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெற்று ஒரு சிறுமியோ அல்லது சிறுவனோ பாதிக்கப்பட்டால் பொறுப்புள்ள அதிகாரிகள் தொடக்கம் சக பணியாளர்கள் வரை துஸ்பிரயோகம் செய்த குற்றவாளியை எப்படிப் பாதுகாக்கலாம் என்பதிலேயே அதிக முனைப்புக் காட்டிச் செயற்படுவார்கள். பாதிக்கப்பட்ட சிறுமியை அல்லது சிறுவனை ஏதோ வேண்டாப் பொருளாகவே நோக்கும் நிலையே காணப்படுகின்றது. பாதிக்கப்பட்ட சிறுவருக்குச் சார்பாக நிற்கும் பெற்றோரையோ அல்லது ஆசிரியரையோ வேண்டாவெறுப்பாக நோக்கி அவர்களை அவ்விடயத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம், இதன் விளைவுகள் பாரதூரமாக அமையும், இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும் இதற்கான முழுப்பொறுப்பையும் நீங்கள்தான் தான் ஏற்க வேண்டிவரும்,

இதை இப்படியே விட்டுவிடுங்கள் எனக் கூறி பலவழிகளிலும் உளவியல் ரீதியாக மிரட்டி குழப்பி வருவார்கள். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் துஸ்பிரயோகக் குற்றவாளி தப்பிக்கக் கூடாது அவருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் அவராலோ அல்லது அவர் போன்றவராலோ இனியும் ஒரு சிறுமி பாதிக்கப்படக் கூடாது என்னும் நோக்கத்தின் அடிப்படையில் செயற்படுபவர்களை அதிகாரிகள் தனியாக அழைத்து ஏதோ கதைப்பார்கள் அதன் பின்னர் அவர் சோர்வடைந்து அதிலிருந்து தானாகவே விலகிவிடுவார். அதிகாரிகள் தனியாக அழைத்துக் கதைத்த பின்னரும் தன்னிலையிலிருந்து விலகாமல் நிற்பவர்களை அனைவரும் ஒதுக்கி ஓரங்கட்டி அவருக்கு உளவியல் பிரச்சினை, அவர் ஒருமாதிரி எனக் கூறி பைத்தியமாக்கி விட்டுவிடுவார்கள். அத்துடன் விடமாட்டார்கள் தொடர்ந்தும் பழிதீர்க்கும் வகையில் அவரை எதிர்த்த ஆசிரியர்கள் முதல் அதிபர், உயரதிகாரிகள் என அனைவராலும் ஒரு வழியில் மாத்திரமல்லாமல் பல வழிகளிலும் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுத்து விரக்தியடைய வைத்து நிலைகுலைய வைத்து விடுவார்கள்.

இப்படியாக வடமாகாணக் கல்விப்புலத்தில் சிறுவர் துஸ்பிரயோகச் செயல்கள் அதிகரித்துச் செல்கின்றன. இது தற்போது சாதாரண விடயமாகவே நோக்கப்பட்டு நடவடிக்கை ஏதுமின்றிக் காணப்படுகின்றது. சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்களும் இவ்விடயத்தில் அக்கறை செலுத்துவதில்லை. இவ்விடயங்களை வெளிக்கொண்டுவர முயல்பவர்களை இனங்கண்டு அவர்களை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகள் தொடர்வதால் இதனை யாரும் கண்டுகொள்வதில்லை.

வடக்கில் மோசமாக அதிகரித்துச் செல்லும் சிறுவர் துஸ்பிரயோகக் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு உடனடியாகவே நடவடிக்கையில் இறங்க வேண்டிய வடமாகாணக் கல்வி அமைச்சு கண்மூடி தூக்கத்தில் இருக்கின்றது. இதில் மத்திய கல்வி அமைச்சு உடனடியாகத் தலையிட்டு உரிய கவனம் செலுத்தி இதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பது பலரதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

தமிழரசன்