May 31

தென்ஆப்பிரிக்க அணியிடம் கண்ட தோல்வி சரியான பாடம்: இங்கிலாந்து கேப்டன் இயான்மோர்கன்

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கண்ட தோல்வி சரியான பாடம்’ என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் கருத்து தெரிவித்தார்.

இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டனில் நேற்று முன்தினம் நடந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 5 ஓவர்களில் 20 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதுடன், 31.1 ஓவர்களில் 153 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபடா 4 விக்கெட்டும், பார்னல், மகராஜ் தலா 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 28.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 2 ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினாலும், கடைசி ஆட்டத்தில் கண்ட மோசமான தோல்வி இங்கிலாந்து அணிக்கு பேரிடியாக கருதப்படுகிறது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நாளை தொடங்கும் நிலையில் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி சந்தித்த தோல்வி விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.