Jul 13

விஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி

விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய சர்ச்சையால், இராஜாங்க அமைச்சர் பதவியை இழந்த விஜயகலா மகேஸ்வரனின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் நிலைக்குமா என்பது இப்போது கேள்விக்குரிய விடயமாக மாறியிருக்கிறது.   

பிரதமரும், ஐ.தே.க தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் அழுத்தங்களை அடுத்து, விஜயகலா மகேஸ்வரன், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.  

அவர் அரசியலைத் துறந்து, வெளிநாடு ஒன்றில் புகலிடம் தேடவுள்ளதாகச் சில தகவல்கள் வெளியாகின. ஆனாலும் அவர், அதனை நிராகரித்திருக்கிறார்.  

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகினாலும், விஜயகலாவை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறார்கள், தெற்கிலுள்ள அரசியல்வாதிகள். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு ஏதும் அவர்களுக்குள் கிடையாது.  

ஐ.தே.க, சுதந்திரக் கட்சி, ஒன்றிணைந்த எதிரணி என்று, எல்லோரும் இணைந்து விஜயகலாவின் எம்.பி பதவியையும் பறிக்க வேண்டும் எனக் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக, இப்போது மூன்று முனைகளில் விசாரணைக்கான முனைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.  

ஒன்று, சபாநாயகரின் உத்தரவின் பேரில், சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொள்ளும் விசாரணை. விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்து, அரசமைப்பை மீறுகின்றதா, அவர் மீது நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து, இந்த விசாரணை நடாத்தப்படுகிறது. 

இரண்டாவது விசாரணையை, குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்கிறது. சிங்கள அடிப்படைவாத அமைப்புகளைச் சேர்ந்த சிலர், பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலும், சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமையவும் இந்த விசாரணை நடக்கிறது.  

மூன்றாவது விசாரணை, ஐக்கிய தேசியக் கட்சியால் நடாத்தப்படுகிறது. ஐ.தே.க தலைமையால், நான்கு பேர் கொண்டு குழுவொன்று நியமிக்கப்பட்டு இந்த விசாரணை நடாத்தப்படுகிறது.  

இந்த விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையிலேயே, விஜயகலா மகேஸ்வரன் குற்றவாளி தான் என்ற தொனியில், அவர் சார்ந்த ஐ.தே.கவும், அதனுடன் கூட்டு அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள சுதந்திரக் கட்சியும், நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன.  

விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்படும் என்று, அமைச்சர் நவீன் திசநாயக்க போன்ற ஐ.தே.க தலைவர்களும், மஹிந்த அமரவீர போன்ற சுதந்திரக் கட்சித் தலைவர்களும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.  

இதிலிருந்து விஜயகலா மகேஸ்வரனைப் பலிக்கடா ஆக்கி, தப்பித்துக் கொள்வதற்கு கூட்டு அரசாங்கத்தில் உள்ள இரண்டு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.  

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கலாமா இல்லையா என்பது குறித்து, பலரும் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கூறியிருக்கிறார்.  

“தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த, விஜேதாஸ ராஜபக்‌ஷ, திலக் மாரப்பன போன்றோர் நெருக்கடிகள் ஏற்பட்டபோது பதவி விலகினர். மீண்டும் அவர்கள், அமைச்சர்கள் ஆக்கப்பட்டனர். அதுபோல, விஜயகலாவுக்கும் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.  

திலக் மாரப்பன விவகாரமும் சரி, விஜேதாஸ ராஜபக்‌ஷ விவகாரமும் சரி வேறுபட்டவை. ஆனால், அவற்றுடன் விஜயகலா விவகாரத்தை ஒப்பிடுவதற்கு சிங்களத் தலைமைகள் தயாராக இருக்கும் போலத் தெரியவில்லை. ஏனென்றால், இது விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையது.  

விஜயகலா மகேஸ்வரனை இந்த இடத்தில் பலிக்கடா ஆக்குவதன் மூலம், அரசாங்கத்துக்கு எதிரான சிங்கள மக்களின் உணர்வுகளை அடக்கி விடலாம் என்று ஐ.தே.க தலைமையும், அரசாங்கத் தலைமையும் கருதுவதாகத் தெரிகிறது.  

அவ்வாறு பார்த்தால், யாழ்ப்பாணத்தில் அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தக் கூடும்.  

அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, யாழ்ப்பாணத்தில் ஐ.தே.க என்றால் மகேஸ்வரன் அல்லது அவரது குடும்பம் என்ற நிலையே உள்ளது. அதற்கு அப்பால், அதனைத் தாண்டி ஐ.தே.க வளரவில்லை.  

பல தசாப்தங்களாக யாழ்ப்பாணத்தில் ஐ.தே.கவுக்கு எந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் கிடைக்காமல் இருந்து வந்த நிலையை, 2000ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றியைப் பெற்று மாற்றியமைத்தவர் தியாகராசா மகேஸ்வரன்.  மீண்டும் 2001இலும், அவர் அந்த நிலையை உறுதிப்படுத்தினார்.  

2004இல் மகேஸ்வரனை யாழ்ப்பாணத்தில் போட்டியிட வேண்டாம் என்று விடுதலைப் புலிகள், கேட்டுக் கொண்டதால், அவர் கொழும்பில் போட்டியிட்டார். அவர் போட்டியிடாததால், ஐ.தே.கவாலும் போட்டியிட முடியவில்லை.  

மகேஸ்வரனின் மரணத்துக்குப் பின்னர், 2010, 2015 நாடாளுமன்றத் தேர்தல்களில் யாழ்.மாவட்டத்தில் ஐ.தே.க தரப்பில் போட்டியிட்டு விஜயகலா மகேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார்.  

ஆக, கடந்த 18 ஆண்டுகளாக, யாழ்ப்பாணத்தில் ஐ.தே.க ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது என்றால், அது மகேஸ்வரன் மற்றும் விஜயகலாவால் தான் சாத்தியமாகி இருக்கிறது.  

இந்தளவுக்கும் இவர்கள் இருவரும் ஒன்றும் பரம்பரை அரசியல்வாதிகளோ, மிகப்பெரிய அரசியல் ஞானம் கொண்டவர்களோ அல்ல.   

மகேஸ்வரனிடம் இருந்த, தற்துணிவும், ஈ.பி.டி.பிக்கு எதிராக அவர் முன்னிறுத்திய அரசியல் நிலைப்பாடும், அவரை வெற்றிபெற வைத்தன. அதன் தொடர்ச்சியான அறுவடைகளை, விஜயகலாவும் பெற்று வந்தார்.   

அரசியலில் அனுபவமில்லாத போதும், வடக்கில் ஐ.தே.கவின் வெற்றிடத்தை நிரப்பக்கூடிய ஒரே ஒருவராக அவரே இருந்ததால், அமைச்சர் பதவி மிகச் சுலபமாகவே கிடைத்தது.  

எவ்வாறு அந்தப் பதவி அவருக்குச் சுலபமாக கிடைத்ததோ, அதுபோலவே மிக எளிதாகவே, அது பறிக்கப்பட்டுள்ளது. அவரது அரசியல் முதிர்ச்சியின்மை தான், இந்த நிலைக்கான காரணம்.  

ஐ.தே.கவுக்கு இப்போதுள்ள பிரச்சினை விஜயகலாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தால், யாழ்ப்பாணத்தில் அந்தக் கட்சிக்கு ஏற்படக் கூடிய பாதிப்பு மிக முக்கியமானதாக இருக்கும்.  

விஜயகலாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று, யாழ்ப்பாண மக்கள் ஒன்றும் வேண்டுதல் வைக்கவில்லை. ஆனால், அவரிடம் இருந்து அந்தப் பதவி பறிக்கப்பட்டதை, அந்தப் பறிப்பு நிகழ்த்தப்பட்டதற்கான காரணத்தை வடக்கிலுள்ள மக்களால் எளிதாக ஜீரணிக்க முடியவில்லை.  

சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தி, அவர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்காமல் விடுவதற்காக, விஜயகலாவைப் பலிக்கடாவாக்க ஐ.தே.க தயாராகுமானால், யாழ்ப்பாணத்தில் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியுமா என்பது சந்தேகம்.  

விஜயகலாவை ஐ.தே.க ஓரம்கட்டினாலோ, அல்லது விலக்கி வைத்தாலோ அதன் விளைவு ஐ.தே.கவுக்கே பாதகமாகும். கடந்தமுறை கூட, விஜயகலா சில நூறு வாக்குகள் அதிகம் பெற்றதால் தான் தெரிவானார்.  

இப்படியான நிலையில், அவர் இல்லாத ஒரு தேர்தலில் ஐ.தே.க எவ்வாறு ஆசனத்தைத் தக்கவைக்க முடியும் என்ற கேள்வி இருக்கிறது.  

2000 ஆம் ஆண்டில் இருந்து யாழ். மாவட்டத்தில் ஐ.தே.க பெற்று வந்துள்ள வாக்குகளின் சதவீதத்தைப் பார்த்தால், ஐ.தே.க இங்கு பலம் பெற்று வந்திருக்கிறது என்று கூறமுடியாது.  

2000ஆம் ஆண்டு 9.6 சதவீத வாக்குகளைப் பெற்ற ஐ.தே.கவுக்கு, 2001இல், 8.7 சதவீத வாக்குகள் தான் கிடைத்தன. 2010இல், இது 8.5 சதவீதமாகக் குறைந்தது. 2015இல், 6.67 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. இது நாடாளுமன்றத் தேர்தல்களின் போக்கு.  

பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், வாக்களிப்பு சதவீதம் என்று வரும் போது, நாடாளுமன்றத் தேர்தல்களில் ஐ.தே.கவின் வாக்கு வங்கி சரிந்து வந்திருப்பதை அவதானிக்கலாம்.  

2013இல், நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் ஐ.தே.கவுக்கு வெறுமனே 899 வாக்குகள் தான் கிடைத்தன என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.  

எனினும், 2018 உள்ளூராட்சித் தேர்தலில், ஐ.தே.க, யாழ். மாவட்டத்தில் 6.3 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது.  

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுடன் இதனை ஒப்பீடு செய்வது பொருத்தமில்லை. எனினும், இது, மேலிருந்து கீழ் நோக்கிய வாக்கு சதவீதமாகவே இருந்து வருகிறது என்பதை உணர்த்துகிறது,  

இப்படியானதொரு நிலையில், விஜயகலாவின் பதவியைப் பறிப்பதன் மூலம், யாழ்ப்பாணத்தின் வாக்கு வங்கியை ஐ.தே.க இழக்கும் நிலை தான் ஏற்படும்.  

அதுவும் விடுதலைப் புலிகள் பற்றிப் பேசியதற்காக விஜயகலா மகேஸ்வரனின் பதவி பறிக்கப்பட்டால், அது தமிழர்களின் தன்மானத்தைச் சீண்டுவதாக இருக்கும்.  

புலிகளைப் பற்றி பேசியதற்காக பதவி இழந்த விஜயகலா மீது அனுதாபமும், ஐ.தே.க மீது வெறுப்புணர்வும் தான் ஏற்படும். இது அடுத்து வரும் தேர்தல்களில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.  

ஐ.தே.கவும், கூட்டு அரசாங்கமும், பெரும்பான்மை சிங்கள மக்களின் பக்கத்தில் நின்று இந்த விவகாரத்தை அணுகப் போகின்றனவா அல்லது பொதுநிலையில் இருந்து கையாளப் போகின்றனவா என்பதே இப்போதுள்ள கேள்வி.  

சிங்கள மக்களின் பக்கத்தில் இருந்தே சிந்திக்கப் போகிறோம், செயற்படப் போகிறோம் என்ற முடிவை கொழும்புத் தலைமைகள் எடுக்குமேயானால், யாழ்ப்பாணத்தில் ஐ.தே.கவுக்கு முடிவுக்காலம் நெருங்கி விட்டது என்றே அர்த்தம்.