Jul 13

ஜூலை மாதத்திற்கும் ஈழத்தமிழருக்கும் என்ன தொடர்பு?

ஏன் இந்த ஜூலை மாதம் ஈழ மக்களைப் பொறுத்தவரை முதன்மைபெற்று விளங்குகின்றது? என்ற கேள்வி நம் அனைவரிடமும் உள்ளதே.


ஈழத்தமிழரின் இழப்புக்கள், துன்பங்கள், சோகங்கள், ஏமாற்றங்கள் என்று ஏராளமான சம்பவங்கள் இந்த மாதத்தில் அவ்வப்போது நடந்துள்ளன.

ஜூலை ஒன்றிலிருந்து முப்பத்தொன்று வரை ஒவ்வோர் நாளும் ஈழத்தமிழர் சார்ந்த குறிப்பிக்கள் பல்வேறு ஆண்டுகளில் பதிவாகியுள்ளன. அவற்றை பின்வருமாறு பார்ப்போம்.

ஜூலை-1

1995 இல் சந்திரிகா அரசு விடுதலைப் புலிகளோடு பேசி அமைதித்திட்டம் ஒன்றை வழங்குவதாகச் சொன்னது. சில நாட்களில் அதை மீறி கடும் யுத்தத்தைத் தொடங்கியது.

ஜூலை-2

2008 இல் போலியான கடவுச் சீட்டு வைத்திருந்தார் என்ற பெயரில் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

ஜூலை-5

1987இல் முதலாவது கரும்புலித் தாக்குதல், கப்டன் மில்லர் அவர்களால் நெல்லியடியில் தொடக்கிவைக்கப்பட்டது. 1992இல் இயக்கச்சி பகுதியில் வான்படையின் விமானமொன்று புலிகளின் ஏவுகணைப் பிரிவினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ஜூலை-6

1956ஆம் ஆண்டு இனப்பிரச்சினைத் தோற்றுவாயான தனிச் சிங்களம் இலங்கையின் அதிகாரபூர்வ மொழியாக ஆக்கப்பட்டது.

ஜூலை-8

1985இல் ஸ்ரீ லங்கா அரசுக்கும் ஈழ தேசிய விடுதலை முன்னணிக்குமிடையில் திம்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.

ஜூலை-9

1995இல் யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு பகுதியில் இராணுவத்தின் முன்னேறிப் பாய்தல் நடவடிக்கை ஆரம்பமானது. அதே நாளில் நவாலி புனித பேதுருவானவர் தேவாலயத்தில் இலங்கை விமானப்படையின் புக்காரா விமானம் 141 தமிழ் மக்களைப் பலியெடுத்தது.

ஜூலை-10

1991இல் ஆனையிறவை மீட்கும் விடுதலைப் புலிகளின் படை நடவடிக்கை தோல்வியுற்றது.

ஜூலை-11

1990இல் வன்னியின் பாரிய படைமுகாமாக இருந்த கொக்காவில் இராணுவமுகாம் விடுதலைப் புலிகளால் தகர்த்து அழிக்கப்பட்டது.

2007இல் கிழக்கு மாகாணத்தில் குடும்பிமலையின் வீழ்ச்சியோடு கிழக்குப் போர் முடிவுக்கு வந்தது.

ஜூலை-12

2007இல் வன்னியில் தாக்குதல் நடத்த வந்த கிபிர் விமானம் வவுனியா காட்டுப் பகுதியில் புலிகளால் அதி நவீன விமான எதிர்ப்பு சுடுகலன்மூலம் சுட்டுவீழ்த்தப்பட்டது.

ஜூலை13

1989இல் தமிழரசுக் கட்சியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜூலை14

1995இல் நவாலியில் 141 தமிழ் மக்களைப் பலியெடுத்த புக்காரா விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தி பழிவாங்கப்பட்டது.

ஜூலை16

1989 புளொட் இயக்கத் தலைவர் உமாமகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1995இல் காங்கேசன்துறையில் கடற்படையின் எடித்தாரா போர்க்கப்பல் புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

2008இல் கடற்புலிகளின் பலமிக்க கோட்டையான மன்னார் விடத்தல்தீவு தளம் ஸ்ரீ லங்கா படையினரால் கைப்பற்றப்பட்டது.

ஜூலை17

1911இல் யாழ்ப்பாணத்தில் புதிய திருமணச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஜூலை18

1918இல் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட இராட்சத சூறாவளி பலரைக் கொன்றது.

1996இல் ஈழப்போரின் திருப்புமுனைப் போரான "ஓயாத அலைகள் 1" ஆரம்பிக்கப்பட்டு முல்லைத்தீவு இராணுவமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது.

ஜூலை19

1996இல் முல்லைத்தீவுக் கடலில் கடற்படையினரின் 'ரணவிரு' என்ற பாரிய போர்க்கப்பல் ஏழு கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.

ஜூலை20

1960இல் இலங்கையின் முதல் பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க தேர்வானார்.

1979இல் பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலாகி பல தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்க்கையைச் சிதைத்தது.

ஜூலை21

2006இல் இறுதி யுத்தத்திற்கு அடித்தளமிட்ட மாவிலாறு அணைக்கட்டு பூட்டப்பட்டது.

ஜூலை22

2008இல் சார்க் மாநாட்டுக்காக விடுதலைப்புலிகள் போர்நிறுத்தமொன்றை அறிவித்தனர். அது அரசால் நிராகரிக்கப்பட்டது.

ஜூலை23

1983இல் திருநெல்வேலியில் புலிகளின் முதலாவது பாரிய கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பழி தீர்க்குமுகமாக இரண்டு வாரங்களுக்குள் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை சிங்களக் காடையர்கள் அடித்தும் வெட்டியும் உயிரோடு எரித்தும் படுகொலை செய்தனர். ஜூலைக் கலவரத்தின் ஆரம்ப நாளும் இதுவே.

ஜூலை24

2001இல் புலிகளின் பதினொரு பேரைக்கொண்ட கரும்புலி அணியொன்று விளையாட்டு வீரர்களைப்போல் கொழும்புக்குள் ஊடுருவி இதே நாளின் அதிகாலைப்பொழுதில் கட்டுநாயக்க விமானநிலையத்தை மறுநாள் காலைவரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து ஏராளமான விமானங்களைத் தாக்கியழித்தனர். இலங்கையின் பொருளாதாரம் மீளமுடியாதளவுக்கு சரிந்தது. ஜூலைக் கலவரத்துக்கு புலிகளின் பதிலடியாகவே இது படைத்துறை ஆய்வாளர்களால் கொள்ளப்பட்டது.

ஜூலை25

1993இல் மணலாறு மண்கிண்டிமலை இராணுவ முகாம் புலிகளால் தகர்க்கப்பட்டது.

ஜூலை26

2006இல் பூட்டப்பட்ட மாவிலாறு அணைக்கட்டை மீட்பதற்கு இராணுவத்தின் சிறப்பு கமாண்டோ அணி வலிந்த யுத்தத்தை ஆரம்பித்தது. இறுதி யுத்தத்தின் ஆரம்பப்புள்ளியும் இதுவே.

ஜூலை27

1975இல் துரையப்பா துரோகப்பட்டம் சூட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். புலிகளின் முதலாவது ஆயுதத்தாக்குதலும் இதுவே.

1985இல் வெலிக்கடைச் சிறையில் இரண்டாம்கட்ட படுகொலைகள் ஆரம்பமானது.

ஜூலை28

2006இல் வாகரையில் இலங்கை விமானப்படை நிகழ்த்திய தாக்குதலில் பல தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஜூலை29

1987இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஜூலை30

2007இல் BBC செய்தி நிறுவனம், விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபடுவதாக செய்தியறிக்கை வெளியிட்டது. புலிகளின் அப்போதைய அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் இதனை முற்றாக நிராகரித்தாலும் இந்த செய்தியறிக்கை சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவைத் தேடிக்கொடுத்தது.

ஜூலை31

2006இல் மாவிலாறு அணைக்கட்டு ஐந்து நாள் யுத்தத்திற்கு பின்னர் புலிகளின் தந்திரோபாய பின்வாங்கலோடு படையினர் வசமானது. ஆனால் புலிகளின் பின்வாங்கலை புலிகளின் பலவீனமாக கருதிய இலங்கை பாதுகாப்புத்துறை அன்றிலிருந்து இறுதிக்கட்ட யுத்தத்தை கிழக்கில் மிக உக்கிரமாகத் தொடுத்தது.

ஜூலை மாதத்தின் ஒவ்வொரு நாளும் தமிழரின் முக்கிய பிரச்சினைகளோடு சம்மந்தப்பட்டிருந்தது என்றுதான் சொல்லமுடியும்.