Jul 12

பேருந்தை கடத்திச் சென்று நெருப்பு வைத்த முகமூடி மனிதன்: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!

வட அயர்லாந்தில் Eleventh Night கொண்டாட்டத்தின்போது முகமூடி அணிந்த நபர் பேருந்து ஒன்றை கடத்திச் சென்று நெருப்பு வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வட அயர்லாந்து தலைநகர் பெல்ஃபாஸ்ட்டில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வட அயர்லாந்தில் ஆண்டு தோறும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி இரவு உல்ஸ்டர் ப்ராட்டஸ்டன்ட் மக்களால் Eleventh Night விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

கலாச்சாரத்தின் ஒருபகுதியாக கொண்டாடப்படும் இந்த விழாவானது கலவரத்தில் முடிவதும் வாடிக்கையாக இருந்துவருகிறது.

இந்த நிலையில் தலைநகர் பெல்ஃபாஸ்ட்டில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் பேருந்து ஒன்றை கடத்திச் சென்று நெருப்பு வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட அந்த பேருந்தானது முற்றாக எரிந்து சேதமடைந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வட அயர்லாந்தின் பெரும்பாலான நகரங்களில் குறித்த கொண்டாட்டத்தின் போது கலவரம் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. பேருந்தை நெருப்பு மூட்டிய பகுதியில் இருந்து குழாய் வெடிகுண்டு ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

பேருந்தை நெருப்பு மூட்டியது மட்டுமின்றி அந்த சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில கார்களுக்கும் தீ வைத்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் வட அயர்லாந்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு நள்ளிரவு ஒரு மணியளவில் சுமார் 327 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு சுமார் 23 சதவிகிதம் தீ வைப்பு சம்பவம் அதிகரித்துள்ளது எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

பேருந்துக்கு நெருப்பு வைக்கப்பட்ட சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், ஆனால் பேருந்து முற்றாக எரிந்து சேதமானது எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.