May 30

கியூபெக் கட்டுமான தொழிலாளர்கள் பணிக்கு திரும்புமாறு கோரிக்கை

கியூபெக் மாகாண கட்டுமான வேலைநிறுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், தொழிலாளர்களை பணிகளுக்கு திரும்புமாறு வலியுறுத்தும் வகையிலுமான சட்டம் ஒன்றை கியூபெக் மாகாண அரசு நிறைவேற்றியுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வரை விவாதத்திலிருந்த மேற்படி சட்டமூலம், பெரும்பான்மை வாக்குகளுடன் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் 76 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும் 21 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

மேற்படி சட்டமூலத்தின் பிரகாரம், மாகாணத்தின் 1 லட்சத்து 75 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களின் பணிநிலைகள் பாதுகாக்கப்படுவதுடன் அவர்களுக்கு 1.8 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தொழிற்சங்கங்களும், கட்டுமானத்துறை நிறுவனங்களும் உடன்பாடு ஒன்றினை ஏற்படுத்திக் கொள்வதற்கு 5 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை லிபரல் ஏற்றுக் கொள்ளவில்லை.

கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைநிறுத்த போராட்டம் கியூபெக் கட்டுமான தொழில்துறையில் கடந்த நான்கு வருடங்களில் முன்னெடுக்கப்படும் இரண்டாவது போராட்டமாகும்.