May 30

மீண்டும் திறக்கப்பட்டது விக்டோரியா ரயில் நிலையம்

மஞ்செஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து மூடப்பட்ட விக்டோரியா ரயில் நிலையம் தற்போது மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்செஸ்டர் விளையாட்டு மைதானத்துடன் இணைந்ததாக காணப்படும் குறித்த ரயில் நிலையம், பாதுகாப்பு காரணங்களின் பொருட்டு மூடப்பட்டிருந்த நிலையில் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், பிரித்தானியாவுக்கு உள்ள தீவிரவாத அச்சுறுத்தல் குறைந்துள்ளமையால் குறித்த ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குறித்த ரயில் நிலையத்தில் இன்று முதல் பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுவர் என அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த திங்கட்கிழமையன்று நடத்தப்பட்ட மஞ்செஸ்டர் தாக்குதலின் போது 22பேர் உயிரிழந்ததுடன் 64பேர் காயமடைந்தனர். இந்த கொடூரத் தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல்தாரி சல்மான் அபேடியும் இந்த தாக்குதலின் போது உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் அபேடியிடமிருந்த நீல நிற பெட்டி தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பொதுமக்களிடமும் ஒத்துழைப்பை கோரியுள்ளனர்.