Jul 07

சுவிற்சர்லாந்தில் பண்டிதர் ச.வே பஞ்சாட்சரத்தின் 111வது நூல்வெளியீடு

தமிழ் மொழியின் சிறப்பு, விரிசடைக்கடவுளே எம் மொழிக்கு கழகம் கண்டார் என்பதாகும். கடவுள் மறுப்பால் புராணத்தை மறுதலித்தாலும் தமிழர்களிடையில் இன்றுவரை நிலவும் இந் நம்பிக்கை உலகில் பிற எந்த மொழிக்கும் இல்லை. ஆகவே நாம் தெய்வத் தமிழ் என்று போற்றுவது மிகப்பொருத்தமாகும்.

என்றும் இளமையுடன் எம் மொழி ஒளிரப் பலரது தமிழ்ப்பணிகள் காரணமாகும். தாய்த் தமிழகத்துடன் ஒப்பிட்டால் ஈழத்தமிழர்களது ஆட்தொகையும் படைப்புக்களின் தொகையும் குறைவானதாக இருக்கலாம்.

ஆனால் சங்க காலம் தொட்டு இன்றுவரை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகள் சிறந்த நற்படைப்புக்களைத் தமிழ் உலிகிற்குப் படைத்தளித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு சிறந்த இலக்கியம் எனப்பது மொழியின் முதுசம் மட்டுமல்ல, அது இனத்தின் மற்றும் அந் நாட்டின் வரலாறும் கூட! இலக்கியம் என்பது மகிழ்வூட்டல் என்ற வகையில் மட்டுமே அமைந்துவிடாது, மானிட வாழ்வியலை செம்மைப் படுத்துவதாகவும் அமைந்திருக்க வேண்டும்.இத்தகைய எமது இலக்கியங்களைப் பேணிப் பாதுகாப்பது மட்டுமன்றி, புதிய பல இலக்கியங்களும் படைக்கப்பட வேண்டும். இதற்கு படைப்பாளிகளை ஊக்குவிக்கபது இன்றியமையாததாகும்.

இவ்வகையில் முத்தமிழ் அறிஞரான பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்கள் எழுதியுள்ள 'திறந்த வெளிச் சிறையில் ஒரு தேசம்' எனும் நூல் சைவநெறிக்கூடுத்தின் ஏற்பாட்டில் தமிழர் களறியால் 30. 06. 2018 சனிக்கிழமை மாலை 17.30 மணிக்கு சுவிற்சர்லாந்து நாட்டில் பேர்ன் நகரில் சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அமைந்திருக்கும் இடத்தில், தமிழர் களறி மண்டபத்தில் இடம் மிகு சிறப்பாக நடைபெற்றது.

திருநிறை. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் மற்றும் திருவளர். செல்வன் சண்முகலிங்கம் சபீன் அவர்கள் கடவுள் வாழ்த்துப் பாடினர்.

மங்கல விளக்கினை வருகை அளித்திருந்தி சிறப்பு விருந்தினர்கள் திருநிறை மகாலிங்கம் ஐயா (நலிவடைந்தோர் நலவாழ்வு சங்கம், சுவிற்சர்லாந்து), திருநிறை. பார்தீபன் (தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து), திருநிறை. சின்னத்துரை லக்ஸ்மன் (பேர்ன் தமிழ்ப்பள்ளி இணைப்பாளர்), திருநிறை. வினாசித்தம்பி தில்லையம்பலம் (சிவஞான சித்தர்பீட நிறுவனர்களில் ஒருவர்), திருமதி. நந்தினி (கல்விச்சேவை பேர்ன் தமிழ்ப்பள்ளி ஆசிரியை) ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

நிகழ்வுகளை திருமதி. முரளிதரன் கார்த்திகா தொகுத்தளித்தார். மங்கல விளக்கேற்றலை அடுத்து நினைவுவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமாகியது.

வரவேற்புரையினை திருவளர். சபீன் சண்முகலிங்கம் ஆற்றியிருந்தார். இவர் ச.வே அவர்களின் இலக்கணப்பூங்கா நூலின் பயனைத் தான் பெற்றதுடன், சுவிற்சர்லாந்தில் பிறந்து வளர்ந்து இன்று தமிழாசிரியராகத் தான் ஆற்றும் பணிக்கும் பண்டிதர் ஐயாவின் நூல் பயன்படுவதை தனது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

ஆசியுரையினை திருநிறை. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் வழங்கினார். பண்டிதர் ச.வே பஞ்சாட்சரம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினைச் சுருக்கி உரையாக ஆற்றிய ஐயா அவர்கள், இனமான உணர்வும், தமிழ் மொழிமீது பற்றும், சைவசமய நம்பிக்கையும் கொண்டு இன்றுவரை இவர் தமிழ் உலகிற்கு ஆற்றும் தமிழ்ப்பணியின் சிறப்பினை எடுத்து உரைத்தார்.

இந்நிகழ்வுபோன்று பல நூறு நிகழ்வுகள் தமிழுலகில் நிகழ வேண்டும், பல ஆயிரம் படைப்புக்கள் தமிழை அடுத்த இளந்தமிழ்ச்சமூகத்திற்கு எடுத்துச் செல்ல வெளிவரவேண்டும் என்று நல்லாசி வழங்கி நிறைந்தார்.

தலமை உரையினை திரு. தில்லையம்பலம் சிவகீர்த்தி சைவநெறிக்கூடத்தின் சார்பில் ஆற்றினார். திரு. ச. வே. பஞ்சாட்சரம் அவர்கள் ஈழத்தமிழ் இலக்கிய உலகிற்குப் புதியவரல்ல. இவர் தமிழில் நூற்றுக்கு மேற்பட்ட சிறந்த சிறுகதைகளை எழுதியுள்ளார்.

இவரது கவிப்படைப்புக்கள் கவிதை வகைமைகளில் தொன்மையானதாக அறியப்படும் மரபுக் கவிதையாகும். தமிழில் உள்ள யாப்பிலக்கண நூல்கள் மரபுக் கவிதை இயற்றும் முறையை எடுத்துரைக்கத் தோன்றியனவேயாகும்.

பாரதியார் காலம் வரை மரபுக் கவிதைகள் இசையோடு பாடப்பட்டு பிற்காலத்தில் இவை படிக்கப்படுவனவாக மட்டுமே அமைந்து விட்டன. பாக்களின் ஓசை நயத்துக்குக் காரணமான சொற்களை அளவிட்டுச் சீர் கொண்டு எழுதுவதில் வல்லவர் ச.வே பஞ்சாட்சரம்.

இவரது பல பாடல்கள் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் இறுவெட்டிலும் அதுபோல் பொன்னூஞ்சற்பாடல்கள் திருக்குடமுழுக்கு நூலிலும் வெளிவந்து இறைவன் இன்பச் செவிகள் தமிழால் நிறைகிறது.

குறில், நெடில், ஒற்று என்னும் எழுத்துகளால் அசையும், அசையால் சீரும், சீரால் அடியும், அடியால் பாடலும் முறையே அமைய ஐயா 20 மேற்பட்ட ஈழவிடுதலைப் பாடல்களைப் படைத்தளித்துள்ளார்.

இவரது 'எழிலி' காவியம் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றது. இதுதவிர மாணவர்களிற்கு பயன்படும் தமிழ் இலக்கண நூல்களையும் எழுதியுள்ளார்.

மிகுந்தாழ்ந்த தமிழறிவும், சிறந்த தமிழ் எழுத்தாற்றலும் கொண்ட இவர், மூன்றுபத்து ஆண்டுகளுக்கு மேலாக, ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தாய்நாட்டையும், மக்களையும் ஆழமாக நேசித்த, இன்றும் நேசிக்கும் இந்த மனிதர், ஈழவிடுதலைப் போராட்ட காலங்களில், தாய்மண்ணில் நிலைத்திருந்து விடுதலைசார் இலக்கியங்கள் பலவற்றைப் படைத்துள்ளார்.

இவ்வாறு போற்றுதற்குரிய இலக்கிய பங்களிப்பை தமிழ்மண்ணிற்கு வழங்கிய பண்டிதர் திரு. ச. வே. பஞ்சாட்சரம் அவர்கள் ஈழத்தமிழர்களின் பெரும் சொத்தாக மதிக்கத்தக்க பெருமனிதராக உயர்ந்து நிற்கிறார்.

இவரது 111வது படைப்பான 'திறந்த வெளிச் சிறையில் ஒரு தேசம்' நூலை வெளியிடுவதில் சைவநெறிக்கூடம், தமிழர் களறி பெருமகிழ்வடைகிறது என்று நிறைந்தார்.

நூல் வெளியீட்டு உரையினை திரு. பொன்னம்பலம் முருகவேள் ஆற்றினார். குழந்தைகளுக்குப் பாப்பாப்பாட்டினை படைத்த இப்பண்டிதர் தமிழில் ஒப்பமிடு பாப்பா என குழந்தைகளுக்கு தமிழ் மீது விருப்பினை ஏற்படுத்தப் பாடியிருக்கும் பாண்டினை மீள்மீட்டிப் பாராட்டினார்.

நூல் மதிப்பீட்டு உரையினை சமூகமுனைப்புள்ள ஈழத்துப் பெண் எழுத்தாளர், மற்றும் பாடலாசிரியர். வன்னி மண்ணிலிருந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விடுதலைப்பாடல்கள், வானொலி நிகழ்ச்சிகள், விமர்சனங்கள், நாடகங்கள் என்று பல தளங்கிலும் ஒரு சமூகவிடுதலை நோக்கிய எழுத்துப்போராளியாக இயங்கிக் கொண்டிருந்தவர்.

திருமதி. ஆதிலட்சுமி சிவகுமார், இவர் ச.வே. பஞ்சாட்சரத்திடம் கல்வி பயின்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தனது ஊரைச் சேர்ந்தவர் நூல் ஆசிரியர், தனது தந்தையின் நண்பர்.

தாயகத்தில் யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் வாழ்ந்த காலம் முதல் ச.வே அவர்களுடன் ஏற்பட்ட இலக்கிய பயணத்தை விளிக்கி உரை ஆற்றினார். எனது தந்தைக்கு நிகரான இவரது தமிழ்ப் படைப்பு சிறந்த இலக்கியம்.

பொதுவாகக் குழந்தைகள் பட்டிமன்றம் என்றால் ஒளிந்துகொள்வார்கள், ஆனால் ஐயாவின் நிகழ்வுகள் என்றால் குழந்தைகளே முதல் வரிசையில் வந்திருந்து இடம் பிடிப்பார்கள். கவிதை என்பதை இரசிப்பதற்கு சிறப்புக் தகமை தேவையில்லை என மரபுக் கவிதையினை பாமரரும் இரசிக்கும்படி படைத்தளிப்பதில் வல்லவர் ச.வே என்று புகழந்துரைத்தார்.

சிறப்புரை ஆற்றிய தமிழ்க் கல்விச்சேவைப் பொறுப்பாளர் திரு. பார்த்திபன் இலங்கையின் வரலாற்றில் மூத்த குடிகள் தமிழர்கள் என்று சான்றுடன் நிறுவி இப்படைப்பாளி படைத்திருக்கும் இலக்கியம் தன்னைக் கவர்ந்துள்ளது என்று பதிவுசெய்தார்.

நிறைவில் நன்றியுரை ஆற்றிய ச.வே பஞ்சாட்சரம் அவர்கள் இவ்விழா சிறக்க வருகை அளித்த அனைவருக்கும், நிகழ்வினைப் பொறுப்பேற்றிய சைவநெறிக்கூடத்திற்கும், தமிழர் களறி அமைப்பிற்கும், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி நவின்றார்.

உலகில் பல இனங்கள் தமது மண்ணில் வல்லாதிக்க சக்திகளால் ஒடுக்கப்பட்டு, மீள எழும்பமுடியாது அடிமைப்பட்டுக்கிடக்கிறார்கள்.

ஈழத்தமிழர் நாம் அறவழியில் போராடி, 30 ஆண்டுகள் ஆயுதமுனையில் போராடி இன்றும் எழுந்து நிற்க முயல்கிறோம்.

நாம் உறுதியுடன் எழுந்து, இழந்த உரிமைகளை அறவழியிலும் இராஜதந்திர நெருக்குதல் ஊடாகவும் பெற வேண்டும். இதற்கு படைப்புக்கள் மக்களைத் தூண்ட வேண்டும்.

தனது படைப்பும் கண்முன் மறைந்திருக்கும் பொருள், உள்ளத்தில் மறையாமல் மீண்டு சிந்திக்கத் தூண்டுவதாக அமைகிறது.

ஆகவே அனைவரும் தமிழைப் படியுங்கள், தமிழைப் பரப்புங்கள் என்று உரையாற்றி நிறைந்தார். நிகழ்வுகள் 20.00 மணிக்கு நிறைவுற்றன.