Jul 06

எம்ஜிஆரை போல வெளிநாட்டு சிகிச்சைக்கு ஜெயலலிதாவை அழைத்து செல்வதற்கான அமைச்சரவை கூட்டத்துக்கு திடீர் தடை

எம்ஜிஆரை போல ஜெயலலிதாவையும் மேல்சிகிச்சைக்கு அழைத்து செல்ல அமைச்சர்கள் அடங்கிய கேபினட் குழுவை கூட்டி முடிவெடுக்க  வேண்டும்.

இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டிய அமைச்சர்கள் பிறகு அதை கண்டுகொள்ளவில்லை என்று முன்னாள் தலைமை  செயலாளர் ராமமோகன ராவ் அளித்த பரபரப்பு வாக்குமூலம் 6 மாதத்துக்கு பிறகு தற்போது கசிந்துள்ளது.

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து  விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ்  ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில் சில தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. 

இதுகுறித்து விசாரணை ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: ராம மோகன ராவ் அளித்த வாக்குமூலத்தில், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை  மேல்நாட்டுக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்று குணப்படுத்தினார்கள்.

அதுபோல ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை  அளித்ததுபோல நாமும் செய்யலாம் என்று கூறினேன். இந்த விஷயத்தை நான்கு நாட்கள் ஆலோசனை செய்தார்கள்.

மேல்நாட்டு சிகிச்சை  விஷயத்தில் ஆரம்பத்தில் அனைத்து அமைச்சர்களும் ரொம்பவே ஆர்வமாக இருந்தனர். திடீரென என்ன நடந்தது என்று தெரியாது. வெளிநாட்டுக்கு  ஜெயலலிதாவை அழைத்து செல்லும் என் ஆலோசனை குறித்து அனைவரும் பேசாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள். 

 நான் கேபினட் செயலாளராக இருந்தாலும், கேபினட்டை(அமைச்சரவையை) கூட்டுவதற்கு முதல்வர் கையெழுத்து தேவை.

அந்த கையெழுத்தை  அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் இருந்து யாரும் பெற்று தர ஆர்வம் காட்டவில்லை. எனவே, முதல்வர் கையெழுத்து இருந்தால்தான்  தான் அமைச்சரவையை நான் கூட்ட முடியும். இதற்காக நான் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஆகவே, நான் அமைதியாகி விட்டேன். முதல்வர் வெளிநாடு மேல் சிகிச்சைக்கு செல்வதில் சாதாரணமாக எந்த சிக்கலும் இருக்காது. மிக எளிய நடைமுறைகளை தவிர அவருடைய  சிகிச்சைக்கான செலவை கூட அரசு தான் ஏற்க போகிறது. இருந்தும், அமைச்சர்களிடம் இருந்து எனக்கு எந்தவித உத்தரவும் வரவில்லை. 

அக்டோபர் மாத இறுதியில்தான் அவர் வெளிநாடு அழைத்து செல்ல வேண்டும் என்கிற பிரச்னை எழுந்து, பிறகு நின்று விட்டது. முதலில் ஆர்வமான  அமைச்சர்கள் பின்பு அமைதியானதற்கு, அமைச்சர்களுக்கு வேறு இடத்தில் இருந்து அனுமதி கிடைக்காதது தான் காரணமா என்று ஆணையம் எழுப்பிய  கேள்விக்கு, அது குறித்து எல்லாம் எனக்குத் தெரியாது என பதில் அளித்தார்.

அச்சமயம் சசிகலா அந்த அறையில் இல்லை. உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தோம். மருத்துவர்கள் என்னிடம் நான்கு மணி  நேரத்திற்குள் மீண்டும் இதய துடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், ஆனால் 24 மணி நேரம் அந்த சிகிச்சை நடைபெற வேண்டுமெனவும் கூறினார்கள்.  ஆனால், எய்ம்ஸ் மருத்துவர்கள் இரவு 10.30 மணிக்கு வாய்ப்பில்லை என்றார்கள்.

அப்போது, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவும்  மருத்துவமனையில் இருந்தார். நான் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஆளுநரிடம் அவ்வப்போது தகவல் தெரிவித்தேன்.இவ்வாறு ராமமோகன  ராவ் வாக்குமூலம் அளித்தாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

வார்டிலேயே நடந்த ஆபரேஷன்

முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் கூறியதாக ஆணைய வட்டாரம் கூறும்போது, 2016 டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதா உடல் நிலை  கவலைக்கிடமாக இருப்பதாக என்னிடம் சொன்னார்கள். நான் உடனடியாக மருத்துமனைக்கு சென்றேன். அப்போது, டாக்டர் பாபு அபிரஹாம் என்னிடம்  ஜெயலலிதாவுக்கு திடீரென சுவாசம் தடைபட்டு மாரடைப்பு ஏற்பட்டது என்றும், அதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய அவரது அறையில்  டாக்டர்கள் சென்றதாக கூறினார்.

அப்போது, நான் வார்டில் பார்த்த போது, முதல்வரின் நெஞ்சு பகுதியினை பிளந்து இதயத்தை செயல்பட வைக்க  சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருந்தது. இதை பார்த்தவுடன் நான் நிலை குலைந்து போனேன். நான் டாக்டரிடம் ஏன் வார்டில் செய்கிறீர்கள்.  அறுவைசிகிச்சை அரங்கிற்கு அழைத்து செல்ங்கள் என்று கூறினேன் என்றார்.