Jul 05

நானோ காருக்கு பிரியாவிடை கொடுக்க தயார் நிலையில் டாடா மோட்டார்ஸ்..!

ரூ. 1 லட்சம் விலைக்குள் கார் என்ற அறிவிப்புடன் நடுத்தர குடும்பங்களை குறிவைத்து வெளியான கார் நானோ. ஆரம்பத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய நானோ விரைவிலேயே காணாமல் போனது. 

அதனுடைய எதிர்பார்ப்பிற்கு மாறான கட்டமைப்புகளும், விலையும் நானோ கார் மீது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக வசதிகளும் திருப்திகரமாக இல்லை. 

ரத்தன் டாடாவின் கனவு கார் என்ற எதிர்பார்ப்போடு களமிறங்கிய நானோ, அறிவிக்கப்பட்டதை விட கூடுதலான விலை பெற்றது. அதனால் டாடா அளித்த உத்தரவாதம் பொய்யானது. 

இப்படி நானோவிற்கான விமர்சனங்கள் எகிறக்கொண்டே போக, விரைவில் டாடா இதன் உற்பத்தியை நிறுத்தப்போவதாக கேள்வி. எனினும் டீலர்கள் நானோ காருக்கான முன்பதிவை நிறுத்திவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குஜராத்தின் சனந்த் பகுதியில் உள்ள டாடா தொழிற்சாலையில், கடந்த மாதம் ஒரே நானோ கார் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் நானோ கார் உற்பத்தியை கைவிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை டாடா வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நானோ காருக்கான உற்பத்தி பணிகள் நிறுத்தப்படுவதற்கு முன்னர், அதன் உதிரி பாகங்களை டாடா மோட்டார்ஸ் நிறுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த காரின் மேம்படுத்தப்பட்ட பணிகளுக்காக நடத்தப்பட்ட ஆய்வில் டாடாவிற்கு இதுவரை ரூ. 1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நானோ கார் உற்பத்தியை நிறுத்த டாடா மோட்டார்ஸ் இயக்குநர்கள் குழு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.