Jul 03

மத்திய தரைக்கடலில் தத்தளித்த புகலிடக்கோரிக்கையாளர்கள்! ஸ்பெய்ன் கடலோர காவல்படையினரால் மீட்பு!

ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரி சென்று மத்திய தரைக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் ஸ்பெய்ன் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், நேற்று திங்கட்கிழமை மாத்திரம் சுமார் 111 புகலிடக்கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாடுகளில் நிலவும் வன்முறைகள் மற்றும் வறுமை வரட்சி நிலை காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் தேடி பயணிப்பவர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

இதனால் ஐரோப்பிய நாடுகள் அகதிகளின் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றதுடன், இத்தாலி மற்றும் மோல்ட்டா ஆகிய நாடுகள், குடியேற்றவாசிகளை தங்கள் நாட்டு அனுமதிப்பதற்கு தடை விதித்துள்ளன.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஸ்பெய்ன், போர்த்துக்கல் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அடைக்கலம் கொடுத்து வருகின்றன.

இத்தாலி மற்றும் மோல்டா ஆகிய நாடுகள் அகதிகளை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து வெலென்சியாவில் அவர்கள் தரையிறங்குவதற்கு ஸ்பெயின் கடந்த ஜூன் மாதம் 600 பேருக்கு அனுமதி வழங்கியிருந்தது.

இந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை மட்டும் 111 புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் 271 புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஸ்பெயின் கடல்சார் மீட்புப் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்ட கிப்ரால்டர் பகுதியிலேயே அதிகளவானோர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான, ஐரோப்பாவின் கொள்கைக்கு ஸ்பெயினும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.