Jul 03

ஹெலிகொப்டர் மூலம் தப்பித்த பலே கைதிக்கு உதவிய சிறைச்சாலை அதிகாரிகள்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட Redoine Faïd எனும் படு ஆபத்தான கொள்ளையன் Seine-et-Marne சிறைச்சாலையில் இருந்து அதிரடியாக தப்பித்திருந்தான். இந்நிலையில், குறித்த கொள்ளையனை தேடும் வேட்டையில் 2,900 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

அதிரடியாக உலங்குவானூர்தி மூலம் சிறைச்சாலைக்குள் இறங்கிய ஆயுதராரிகள் சிலர், சிறைச்சாலை அதிகாரிகளை பிணையக் கைதிகளாக பிடித்துக்கொண்டு, Redoine Faïdஐ மீட்டனர். குறித்த உலங்குவானூர்தி சில மணிநேரம் கழித்து எரிந்த நிலையில், சாள்-து-கோல் விமான நிலையத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையன் உலங்குவானூர்தியில் இருந்து வெள்ளை நிற வாகனம் ஒன்றில் ஏறி தப்பியுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதமர் எத்துவா பிலிப் தெரிவிக்கும் போது, ‘இந்த முறையில் சிறைக்கைதி தப்பிச்சென்றது ஏற்றுக்கொள்ள முடியாதது’ என குறிப்பிட்டார். சிறைச்சாலையில் உலங்குவானூர்தி இறங்காமல் இருப்பதற்குரிய எந்த தடையையும் அவர்கள் உருவாக்கவில்லை என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தவிர ஐந்து மாதங்களின் முன்னர் ஒரு தடவை இதுபோன்று உலங்குவானூர்தி மேலே வட்டமடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே கொள்ளையனை தேடும் பணி ஆரம்பித்திருந்தது. ஜோந்தாமினர் காவல்துறையினர் என மொத்தம் 2,900 அதிகாரிகள் இத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த கொள்ளையன் தப்பிச்சென்ற உலங்குவானூர்தி Gonesse நகரில் எரித்துவிட்டு, அங்கிருந்து கருப்பு நிற கார் ஒன்றின் மூலம் தப்பிச் சென்றுள்ளான். ஓல்னே சூ புவாவுக்கு அருகே அந்த காரை எரித்துவிட்டு, வெள்ளை நிற வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளான்.