May 29

ரஜினியின் முதல் அதிரடி: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மன்ற தலைமையின் ஒப்புதல் இல்லாமல் யாரும், யாருக்கும் பேட்டி கொடுக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு கண்டிஷன் போட்டுள்ளார் ரஜினி.

தன் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்தபோது, நடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பயணம் பற்றி மறைமுகமாக வெளிப்படுத்தினார். ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரிய விவாதம் நடந்து கொண்டுள்ளது.

இதுஒருபுறம் இருக்க ரஜினி - ரசிகர்கள் சந்திப்பின் போது பல முறைகேடுகள் நடந்ததாக சைதை ரவி என்பவர், ரஜினி தலைமை ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் மீது குற்றம் சாட்டினார். இந்நிலையில் மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் உடனடியாக நீக்கப்படுவர், அதற்கான முழு அதிகாரத்தையும் சுதாகருக்கு வழங்குகிறேன் என ரஜினி சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கை வெளியான மறுநாளிலேயே சைதை ரவி, மன்றத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் ரஜினி சார்பில் சுதாகர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் " மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சென்னை, சைதாப்பேட்டை ரவியை மன்றத்தின் அடிப்படை பதவியிலிருந்து நீக்கப்படுகிறார். இனி அவருடன் யாரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தொலைப்பேசி வாயிலோ, மற்றவர்கள் மூலமாகவோ எந்த தொடர்பும் வைத்து கொள்ள கூடாது.

மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மற்ற உறுப்பினர்களும், நிர்வாகிகளும் மன்ற தலைமையின் ஒப்புதல் இல்லாமல் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பேட்டி, பொது விவாத நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதை தவிர்த்து ஒத்துழைப்பு தரும்படி கேட்டு கொள்கிறேன்" என அதில் குறிப்பிட்டிருந்தது.