Jul 02

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 61 வது பேராளர் மாநாடு பதுளையில்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 61 வது பேராளர் மாநாடு ‘ஆசிரியர் சேவைக்கு ஆசிரியர் பேரவையை வென்றெடுப்போம்’ என்னும் தொனிப்பொருளில் பதுளை தபாலக கேட்போர் கூடத்தில் 2018 ஜூன் 29 ஆம் திகதி நடைபெற்றது.. இதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் -அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் - ஆசிரியப் பணியை அகில இலங்கை சேவை என்ற தளத்திற்கு நகர்த்தி - அதை ஒருங்கிணைந்த சேவையாக நிறுவுவதோடு -ஆசிரியர்களை புலமைத்துவ குழுமமாக கட்டமைக்க ஆசிரியர் பேரவையை வெற்றி கொள்வதே ஒரே வழி என்பதை அடிப்படையாகக் கொண்டு   செயற்படும் நடைமுறைகள் குறித்து இம்மாநாட்டில் ஆராயப்பட்டது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப்ஸ்ராலின்  இம்மாநாட்டில் உரையாற்றும்போது -

இந்த ஆண்டில் மிகவும் அருவருக்கத்தக்க அரசியல் தலையீடு கல்வியில் இடம்பெற்ற மாவட்டமாக பதுளை இருக்கின்றமையால் இந்த மாநாடு இங்கு சிறப்பாக நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டது. இதைபோன்று வடமாகாணத்திலும் கல்வியில் அரசியல் தலையீடுகள் உள்ளன எனக் குறிப்பிட்டார்.

இதுதவிர அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு அமைய- மொத்தத் தேசிய வருமானத்தில 6 வீதத்தினை கல்விக்கு ஒதுக்குதல் - கல்வியை தனியார் மயப்படுத்தும் அரசின் செயற்பாடுகள் - இலவசக் கல்வியை படுகுழிக்குள் தள்ளும் வகையில் சமர்ப்பிக்கப்படும் அமைச்சரவைப் பத்திரங்கள் -அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்ய எடுக்கப்படும் சூழ்ச்சிகள் - தகுதியற்ற முறையில் வழங்கப்படும் கல்வித்துறை சார்ந்த நியமனங்கள் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு - இலங்கை அதிபர் சேவையில் இன்றுவரை தீர்வு காணப்படாதுள்ள பிரச்சினைகள் போன்ற கோரிக்கைகளையும் பிரேரணைகளையும் முன்னிறுத்தியதோடு - நல்லாட்சி அரசின் ஏமாற்று வேலைகள் - அதாவது தகவல் அறியும் சட்டத்தின் செயற்பாடுகள் போதாமை - நிறைவேற்று சனாதிபதி முறைமை தொடர்ந்து செல்கின்றமை - கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் - காணாமல் ஆக்கப்பட்டோர் ஆகியோருக்கு தாமதமடைந்து செல்லும் நீதி - உறை நிலையில் காணப்படும் இனப்பிரச்சினைக்கான தீர்வு - அரசியல் கைதிகள் விடயத்தில் காட்டப்படும் பூச்சிய சகிப்புத் தன்மை என்பவற்றோடு - வடகிழக்கு மக்களின் அடிப்படை மனிதாபிமான பிரச்சினைகள் தொடர்பாகவும் இம்மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் கடந்த காலங்களில் முஸ்லீம் மக்கள் மீது பிரயோகிக்கப்பட் வன்முறைகள்- பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் - அப்பகுதிகளின் சமகால கல்வியின் நிலை பற்றியும் கூர்ந்து நோக்குவதோடு மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை அடைய வகுக்க வேண்டிய மூலோபாய கொள்கைகள் பற்றி இம்மாநாட்டில் பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டில் 'ஆசிரியர் குரல்' என்னும் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது