Jul 02

தமிழினத்தின் இருப்பை பின்னோக்கித் தள்ளும் வடமாகாணக் கல்விப் போக்கு!

வடமாகாணக் கல்வியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும், ஏற்றுக்கொள்ள முடியாத முறைகேடுகள், அரசியல் தலையீடுகள், அதிகாரத்துஷ;பிரயோகங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உத்தியோகபூர்வ ஏட்டில் வெளிவந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 61 வது பேராளர் மாநாடு  (29.06.2018) பதுளையில் நடைபெற்றது. அன்றைய தினம் அங்கு வைத்து வெளியிடப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உத்தியோகபூர்வ ஏடான ஆசிரியர் குரல் என்னும் சஞ்சிகையிலேயே மேற்படி விடயம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,

ஒரு தேசிய இனம் தன்னை அடையாளப்படுத்துவதற்கு மொழி, கலாசாரம், பொருளாதாரம், நிலப்பரப்பு என்பவை பிரதானமானவையாகும். இந்த புவிப்பரப்பில் இவற்றை அர்த்தம் நிறைந்ததாக மாற்றுவதற்கு பிரதான காரணியாக கல்வியே விளங்குகின்றது. ஆனால் வடமாகாணத்தில் இதற்கு முன்பும் பின்பும், கல்வி அரசியல் வசமாகி வடமாகாணக் கல்வியமைச்சர்களின் அரசியலாலும் வடமாகாண அதிகாரிகளின் முறைகேடுகளாலும் சிறைப்பட்டு மீளமுடியாத இடத்தில் கல்வி நிற்கின்றது. தரமான நீதியான முன்மாதிரிகையான நிர்வாகத்தைக் கொண்டு நடத்த வேண்டும் என்ற சிந்தனை வடமாகாண சபையிடம் அறவே இல்லை. அவரவர் அரசியலுக்காக அரசியல்வாதிகளும், தமக்கு வேண்டப்பட்டவர்களுக்காக கல்வியதிகாரிகளும் முண்டியடித்துக் கொண்டு செயற்படுகின்றனர். இதனால் ஒட்டு மொத்த வடமாகாணத்தின் கல்வியும் சிதைக்கப்படுவது மட்டுமல்லாது தமிழ் தேசிய இனத்தின் இருப்பே அபாய நிலையில் உள்ளது. இக்குற்றச்சாட்டுகள் வெறுமனே ஊகங்களால் சுமத்தப்பட்டவை அல்ல. மாறாக ஒரு நிர்வாகக் கட்டமைப்பில் பின்பற்றப்பட வேண்டிய நீதியான சட்டவரைமுறைகளின் அடிப்படையில் வடமாகாண கல்வியமைச்சு செயற்பட்டிருக்காத நிலையிலேயே குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக விமர்சிக்கப்படுகின்றது.

2018ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தின்போது பாதிக்கப்பட்ட சங்கீதம், நடனம் போன்ற அழகியல் பாடங்களைக் கற்பிக்கும் வெளிமாவட்டத்தில் சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த நுண்கலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாற்றத்தை வழங்காமல் வடமாகாண கல்வித்திணைக்களம் இழுத்தடிப்புக்களைச் செய்து வருகின்றது. மேற்குறிப்பிட்ட பாடங்களுக்கு யாழ் மாவட்டத்தில் மேலதிக ஆசிரியர்கள் உள்ளனர் எனக் காரணம் காட்டப்பட்டதற்கு அமைய அவ்விடயத்தை எவ்வகையில் கையாள்வது என்பது தொடர்பில் இடமாற்றச்சபையிலும் மேன்முறையீட்டுச் சபையிலும் இரண்டு விதமான யோசனைகள் பரிசீலிகப்பட்டிருந்தன. ஆயினும் இவ்விடயம் தொடர்பாக ஆசிரியர்களின் நலனில் அக்கறையற்று ஆசிரியர்களை வெற்றிடமுள்ள பாடசாலை விபரங்களை வலயங்களில் பெற்றுவரும்படி அதிகாரிகள் அலைக்களித்துள்ளனர். வலயங்களும் வெளிமாவட்டத்தில் சேவை செய்யாத, தமக்கு வேண்டப்பட்டவர்களின் தரவுவுகளை மறைத்து அவர்களைக் காப்பாற்றியுள்ளன. இத்தகைய சுயநலமிக்க அதிகாரிகளினால் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டும் அலைக்களிக்கப்பட்டும் வருகின்றனர்.

இத்தகைய நடைமுறைச் சிக்கலை வடமாகாண கல்வித்திணைக்களத்தோடு இணைந்து தீர்ப்பதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் போதிய ஒத்துழைப்பையும் சாத்தியமான முன்மொழிவுகளையும் வழங்கியிருந்தது. ஆயினும் வடமாகாண கல்வித்திணைக்களம் தொடர்ந்தும் முறைகேடுகளையே செய்து வருகின்றது.

அதுமட்டுமல்லாமல் வெளிமாவட்ட சேவைக்கென யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து அனுப்பப்படுவோர் தொடர்பாகவும் இடமாற்றச்சபையோ மேன்முறையீட்டு சபையோ கூட்டவில்லை. 2007Æ20 தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை மீறி வடமாகாணக் கல்விப்பணிமனை அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் திருப்திப்படுத்தும் வகையிலும் அதிகாரிகள் தமக்கு வேண்டியவர்களைப் பாதுகாக்கும் வகையிலுமே இடமாற்றங்களைச் செய்து வருகின்றனர்.  இதில் வேடிக்கை என்னவென்றால் இரண்டு தடவைகளுக்கு மேல் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தும் கல்வி அதிகாரிகளின் துணையுடன் வடமாகாண கல்வி திணைக்களத்தை விட்டு செல்லாதுள்ள பிரதம பெண் லிகிதரும் இடமாற்றங்களில் தன்னிச்சையாகத் தலையிடும் நிலையே வடமாகாண கல்விப் புலத்தில் இன்று காணப்படுகின்றது. இதுபோன்ற செயற்பாடுகளால் முல்லைத்தீவு, துணுக்காய், மடு போன்ற கல்வி வலயங்கள் ஆசிரியர் பற்றாக்குறையாகவே தொடர்ந்தும் இருந்துவருகின்றது.

வடமாகாணத்தின் யாழ்ப்பாணக் கல்வி வலயம் முக்கியமான கல்வி வலயங்களில் ஒன்றாகும். ஆனால் இங்கு முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் ஓய்வு பெற்றுச் சென்று 3 மாதங்கள் கடந்த நிலையிலும் இன்று வரை வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனம் இழுபறியிலேயே உள்ளது. அரசியல் தலையீடுகளும் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட வடமாகாண கல்வி அமைச்சின் நிபந்தனைகளுமே இந்த இழுபறிகளுக்குக் காரணமாகக் கூறப்படுகின்றது. இதுவரை காலமும் வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனங்களில் முன்வைக்கப்படாத புதிய நிபந்தனைகளை யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்தின்போது வடமாகாணக் கல்வியமைச்சு விதித்துள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற யாழ் வலயக்கல்விப் பணிப்பாளர் நேர்முகத் தேர்வில் முறைகேடு உள்ளதாக வடமாகாண ஆளுநரால் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கு தற்போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளும் மீண்டும் தமக்கு சார்பானவர்களை நியமிப்பதற்கான சூழலையே ஏற்படுத்தியிருக்கின்றது.

புதிய நிபந்தனையின் 111ம் பிரிவில் வலயக்கல்விப் பணிப்பாளராகÆவலயக்கல்வி பணிப்பாளராக பதில் கடமையாற்றும் உத்தியோகத்தர் குறைந்தபட்சம் மூன்று வருட காலத்தையாவது தற்போது கடமையாற்றும் பிரிவில் கடமையாற்ற வேண்டும். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூர இடங்களில் உள்ள கல்வி வலயங்களுக்கு பணிப்பாளர்களை நியமிக்கும்போது பணிமூப்பு கவனத்தில் கொள்ளாது சிலரை மட்டும் அச்சுறுத்தி கட்டாயப்படுத்தி அனுப்புவதும் சில காலங்களிலேயே வேறு வேறு வலயங்களுக்கு அவர்களையே மாறி மாறி இடமாற்றுவதுமே இதுவரை நடைபெற்று வந்துள்ளது. ஆனால் கஸ்ரப்பிரதேசங்களில் சென்று பணியாற்றாது அரசியல்வாதிகளின் தயவில் வாழ்பவர்களுக்கு அருகிலுள்ள வலயங்களை வழங்குவதற்காகவே இந்த புதிய நிபந்தனை விதிக்கப்பட்டதாக சந்தேகம் எழுந்திருக்கின்றது.

எனவே தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக நிபந்தனைகளைப் போடாது தகுதியானவர்களை நியமிப்பதற்கான நிபந்தனைகளினூடாகவே யாழ் வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவும் இடம்பெற வேண்டும் என புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். 

இவற்றைவிட வடமாகாண கல்வியமைச்சர் கல்வி அமைச்சை நிர்வகிக்கும் தன்மைக்கும் வடமாகாணத்தின் முறைகேடுகளின் போக்குகளுக்கும் சிறந்த உதாரணமொன்று மிக அண்மையில் நடந்தள்ளது. யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரியில் தொடர்ச்சியாக 7 வருடங்கள் பணியாற்றியோருக்கான உள்ளக இடமாற்றத்தின்போது அப்பாடசாலையில் 7 வருடத்தை பூர்த்தி செய்த ஆசிரியை ஒருவருக்கு இடமாற்றச் சபையில் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு கடமையாற்றி சில மாதங்களுக்குள் வடமாகாண கல்வியமைச்சரின் முறையற்ற தலையீட்டால் முன்னைய கல்வியமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரிக்கே மீண்டும் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

7 வருடம் ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக பணியாற்றி இடமாற்றம் வழங்கப்பட்ட ஒருவரை குறுகிய காலத்திற்குள் அதே பாடசாலைக்கு இடமாற்ற சபையின் தீர்மானத்தை மீறி வழங்கப்பட்ட இடமாற்றம் முறைகேடானது என செயலாளர் இ.இரவீந்திரனுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியதற்கு இணங்க அவரால் இந்த இடமாற்றம் நிறுத்தப்பட்டது. அப்போது வடமாகாண கல்வியமைச்சின் செயலாளராக இருந்த இரவீந்திரனும் தற்போது வேறு அமைச்சுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்தார்.

இந்த இடைவேளையில் தான் வடமாகாண கல்வியமைச்சரின் நாடகம் அரங்கேறியது. வடமாகாண கல்வியமைச்சர் தனது பிரத்தியேக செயலாளர் திரு. ஆனந்தராஜின் கையொப்பத்துடன் யாழ்.வலயக்கல்விப் பணிப்பாளருக்கு முகவரியிடப்பட்ட கடிதத்துடன் குறித்த ஆசிரியை யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரியில் மீண்டும் கடமைப் பொறுப்பேற்க வைத்துள்ளார். கல்வியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஒரு திணைக்களத் தலைவர் இல்லை. அவரது கடிதத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டமை மிகப்பெரிய அதிகாரத் துஸ்பிரயோகமாகும். அத்துடன் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு முகவரியிடப்பட்ட கடிதத்துடன் குறித்த பாடசாலையில் கடமையைப் பொறுப்பேற்க அனுமதித்தமை யாழ்.கொக்கவில் இந்துக் கல்லூரி அதிபரின் முறைகேடான செயற்பாடாகும். வடமாகாண கல்வியமைச்சரின் நெருங்கிய உறவுக்காரரான குறித்த பாடசாலை அதிபரும் வடமாகாண கல்வியமைச்சரும் குறித்த ஆசிரியைக்கு சார்பாக மிகப்பெரும் முறைகேட்டைப் புரிந்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாண ஆளுநருக்கும் முறையீடு செய்தும் இம்முறைகேடு நிவர்த்தி செய்யப்படவில்லை. இம்முறைகேடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.

வடமாகாண கல்வித் திணைக்களத்தால் விசேடகல்வி அலகுக்கு உதவியாளர்கள் நியமனம் என்னும் போர்வையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட ஒரு இளம்தாய் வடமாகாண கல்வியமைச்சர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் வரை சென்று முறையிட்டதால் தற்காலிக பணியிலிருந்தே நீக்கப்பட்டுள்ள சம்பவமும் வடமாகாண கல்வித் திணைக்களத்தால் அரங்கேறியிருக்கிறது. இதுபோன்ற பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆயினும் சில சம்பவங்களுக்கே ஆதாரங்கள் கிடைக்கின்றன. இவ்வாறு கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் க.பொ.த உயர்தரத்தில் சித்தியடையாதவர்களையும் வடமாகாண கல்வித் திணைக்களம் விசேட கல்விக்கான ஆசிரிய உதவியாளர்களாக பணியில் ஈடுபடுத்தியுள்ளது. விண்ணப்பம் கோரலோ அல்லது நேர்முகத்தேர்வோ எதுவுமே இந்நியமனம் தொடர்பாக நடைபெறவில்லை. சில தனிநபர் விருப்பிலேயே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அரசசார்பற்ற நிறுவனம் மூலம் மாதாந்தம் 24000.00 ரூபா சம்பளம் வழங்குவதாகவும் பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் எனவும் கூறியே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் கடந்த ஆறுமாத காலத்துக்கும் அதிகமாக எந்தவிதமான கொடுப்பனவும் வழங்கப்படாமல் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதிலொருவர் தனக்கு ஆறுமாதமாக சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் இதனால் தனது குடும்பத்தை பராமரிக்க முடியவில்லையென வடமாகாண கல்வியமைச்சுக்கும் முதலமைச்சருக்கும் பதிவுத் தபால் அனுப்பியிருந்தார். ஆனால் வாக்குறுதியளித்தபடி தனக்கான கொடுப்பனவை கேட்டவரை உடனடியாகவே விசேட கல்விக்குப் பொறுப்பான மாகாண உதவிக்கல்விப் பணிப்பாளர், பணியிலிருந்து நீக்கியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக வடமாகாண கல்விப் பணிப்பாளருக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தெரியப்படுத்தியிருந்தும் எவ்விதமான நிவாரணத்தையும் வடமாகாண கல்விப்பணிப்பாளர் மேற்கொள்ளவில்லை.

இத்தகைய முறைகேடுகள் நடைபெறுவது தொடர்பாக எவ்வித அக்கறையுமற்றவர்களாக தமது பதவிக் காலம் முடியம்வரை தமது கதிரைகளை பாதுகாத்தால் போதும் என்ற நிலையிலேயே வடமாகாண கல்வியதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இருக்கின்றனர். 

வடமாகாணத்தின் கல்வியின் பெறுபேற்றை அதிகரிக்கவேண்டுமென ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வடமாகாண கல்வியமைச்சு தொடர்ச்சியாக முறைகேடுகளாலும் பாரபட்சங்களாலும் அதிகார துஸ்பிரயோகங்களாலும் வடமாகாண கல்வியை படுகுழிக்குள் தள்ளும் செயற்பாட்டையே செய்துவருகின்றது.

முன்னாள் வடமாகாண கல்வியமைச்சரை விட முறைகேடுகளுக்கு அதிகமாக துணைபோகும் தற்போதய வடமாகாண கல்வியமைச்சரின் திறனற்ற செயற்பாடுகளுக்கும் வடமாகாண கல்வியதிகாரிகளின் முறைகேடுகளுக்குமாக விசாரணைக்குழு அமைத்து விசாரிக்க வடக்கு மாகாணசபை முன்வர வேண்டும். வடக்கு மாகாணத்தின் கல்வியின் வளர்ச்சியில் வடக்கு மாகாண சபையும் முதலமைச்சரும் உண்மையான அக்கறைகொண்டு இதயசுத்தியுடன் செயற்படுவார்களானால் விசாரணைக்குழுவுக்கு போதிய ஆதாரங்களுடன் சாட்சியங்களுடன் முன்னிலையாக இலங்கை ஆசிரியர் சங்கம் எப்போதும் தயாராகவுள்ளது.


-ஆசிரியர் குரல்.-