Jun 28

மீண்டும் தேச சேவையை கட்டாயமாக்கும் பிரான்ஸ்!

16 வயதான இளைஞர்களுக்கு தேச சேவையை மீண்டும் கட்டாயமாக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டுப்பற்றையும் தேச ஒருமைப்பாட்டையும் குறித்த எண்ணத்தை பிரான்ஸ் நாட்டு இளைஞர்களிடையே உருவாக்கும் நோக்கத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இந்த யோசனையை முன்வைத்தார்.

இந்த தேச சேவை 16 வயதான ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் அனைவருக்கும் பொதுவானது.

அது இரண்டு பாகங்களாக நிறைவேற்றப்பட வேண்டும். முதல் பாகம் ஒரு மாத கட்டாய சமூக சேவை செய்தல். அது புதிய உறவுகளை உருவாக்கவும் சமுதாயத்தில் தங்கள் பங்கைச் செய்யவும் இளைஞர்களுக்கு உதவும் என அரசு கூறுகிறது.

இதில் தன்னார்வ கற்பித்தல் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் வேலை செய்தல் ஆகிய திட்டங்கள் பரிசீலனையில் இருப்பதோடு பொலிஸ், தீயணைப்புத்துறை அல்லது ராணுவத்தில் பயிற்சி எடுத்தலும் அடங்கும்.

தேச சேவையின் இரண்டாவது பாகம் மூன்று மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை பாதுகாப்புத்துறை தொடர்பான ஒரு பகுதியில் பணிபுரிதலாகும். அதே நேரத்தில் பாதுகாப்புத்துறைக்கு பதிலாக இளைஞர்கள் பாரம்பரியம், சுற்றுச்சூழல் அல்லது சமூக அக்கறை தொடர்பான துறைகளையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இத்திட்டம் முறையாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே 14 இளைஞர் அமைப்புகள் இத்திட்டம் குறித்த தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.

ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகள், 60 சதவிகிதம்பேர் இத்திட்டத்திற்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்தாலும் அந்த எண்ணிக்கை தற்போது பாதியாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.