Jun 27

மேலும் சில அகதிகளை பிரான்சுக்கு அழைக்க உள்ளோம்! - ஜனாதிபதி அறிவிப்பு

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், 'மேலும் சில அகதிகளை பிரான்சுக்கு அழைக்க உள்ளோம்!' என நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

234 அகதிகளுடன் Lifeline எனும் கப்பல், இத்தாலி கடற்பரப்பில் நிற்க, இத்தாலி அரசு அகதிகளை அனுமதிக்க மறுத்துள்ளது.

அதைத் தொடர்ந்து, நேற்று செவ்வாய்க்கிழமை வத்திக்கானுக்குச் சென்ற இம்மானுவல் மக்ரோன், போப் ஆண்டவருடன் சந்திப்பை முடித்துக்கொண்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பை மேற்கொண்டார்.

அப்போது, 'Lifeline' கப்பலில் உள்ள அகதிகளில் சிலரை பிரான்ஸ் ஏற்றுக்கொள்கிறது. அதற்கான பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன!' என குறிப்பிட்டார்.

ஐரோப்பாவுக்குள் தஞ்சம் புகும் அகதிகளுக்கு பிரான்ஸ் என்றுமே அனுமதி மறுத்ததில்லை. Lifeline அகதிகளை, ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகளும் பிரித்து ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுவே ஐரோப்பிய நாடுகளுக்கான ஒற்றுமையை குறிக்கும்!' எனவும் மக்ரோன் அறிவித்துள்ளார்.