Jun 27

உலகக்கோப்பை கால்பந்து - நைஜீரியாவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது அர்ஜெண்டினா

ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் நேற்று நடந்த லீக் போட்டியில் நைஜீரியாவை 2-1 என வீழ்த்திய அர்ஜெண்டினா அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

இரு அணிகளும் இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கின. அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்சி முதல் இரண்டு லீக் போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்த போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.

இப்போட்டி தொடங்கியதில் இருந்தே அர்ஜெண்டினா வீரர்கள் பந்தை முடிந்த அளவு தங்கள் வசமே வைத்திருந்தனர். 14-வது நிமிடத்தில் 

அர்ஜெண்டினா அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் மெஸ்சி சிறப்பான முறையில் ஒரு கோல் அடித்தார். இதனால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அதன்பின், முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜெண்டினா 1-0 என முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் நைஜீரியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நைஜீரியா வீரர் விக்டர் மோசஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. 

அதன்பின் 87-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் மார்கஸ் ரோஜோ கோல் அடித்தார். இதனால் அர்ஜெண்டினா அணி 2-1 என முன்னிலை பெற்றது.

அதன்பின் எந்த கோலும் அடிக்கப்படாததால் அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக நடந்த மற்றொரு டி பிரிவு ஆட்டத்தில் குரோசியா அணி ஐஸ்லாந்தை வீழ்த்தியது. இதனால் இந்த பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த அர்ஜெண்டினா அணி நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிப்பெற்றது