Jun 26

வெனிசுவேலாவின் ஜனாதிபதி தேர்தல் நியாயமாக இடம்பெறவில்லை! ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு!

வெனிசுவேலாவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமானதாகவும், இடம்பெறவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

அத்துடன், வெனிசுவேலாவின் துணை ஜனாதிபதி மற்றும் அதிகாரிகள் மீதும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.

வெனிசுவேலாவில் ஜனாதிபதி தேர்தல், கடந்த மே மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இந்த தேர்தலில், நிக்கொலஸ் மடூரொ வெற்றி பெற்று, மீண்டும் வெனிசுவேலாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

எனினும், இந்த தேர்தல் நியாயமான முறையில் இடம்பெறவில்லை எனவும், மோசடிகள் இடம்பெற்றதாகவும். அந்நாட்டு எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்ததுடன், குறித்த தேர்தலை புறக்கணித்திருந்தனர்.

இந்த நிலையில் வெனிசுவேலாவில் இடம்பெற்ற தேர்தல், 'சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடக்கவில்லை என தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், வெனிசுவேலாவின் துணை ஜனாதிபதி மற்றும் அதிகாரிகள் மீது தடை விதித்துள்ளது.

வெனிசுவேலாவின் துணை ஜனாதிபதி டெலிசி ரோட்ரிக்ஸ் மற்றும் அந்நாட்டின் 11 அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைவதற்கு தடை விதிப்பதாக குறித்த அமைப்பு அறிவித்துள்ளது.

அத்துடன் ஐரோப்பாவில் உள்ள அவர்களின் சொத்துக்களும் முடக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிததுள்ளனர்.