Jun 26

நபர் ஒருவருடன் எரியூட்டப்பட்ட கார் – விசாரணைகள் தீவிரம்

மிசிசாகா பகுதியில் நபர் ஒருவருடன் கார் ஒன்று எரியூட்டப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 6.50 அளவில் டிக்சி வீதி மற்றும் லேக்ஷோர் வீதிப் பகுதியில் உள்ள சிறிய காடு ஒன்றுக்கு அருகே உள்ள வெற்றுத் திடலில், அந்த கார் எரிந்து கொண்டிருந்த நிலையில், அங்கு பீல் பிராந்திய காவல்துறையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

காவல்துறையினர் அங்கு சென்றபோது அந்த கார் முற்றாக தீக்கிரையாகியிருந்ததாகவும், தீயணைப்பு படையினர் மீதமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்த வேளையில், அந்த காருக்குள் இருந்து கருகிய நிலையில் ஒருவரது உடல் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச சம்பவத்தினை சந்தேகத்திற்கிடமானதாக வகைப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட அந்த சடலத்துக்குரியவரது பெயர் விபரங்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு புலனாய்வாளர்களால் விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.