Jun 23

பண்ணைப் பகுதியில் மாநகர முதல்வர் பங்குகொண்டமையானது சபையின் தீர்மானத்தையே மீறும் செயல்

ஆளுநரின் ஏற்பாட்டில் பண்ணைப் பகுதியில் இடம்.பெற்ற மரம் நாட்டுவிழாவில் மாநகர முதல்வர் உள்ளிட்ட சிலர் பங்குகொண்டமையானது  சபையின் தீர்மானத்தையே மீறும் செயல் என மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணன் சுட்டிக்காட்டியதனால் சபையில் கடும் தர்க்கம் நீடித்ததோடு அவ்வாறானால் வாய்ச் சவால் விடுபவர்களில் எத்தனைபேர் மீண்டும் துப்பாக்கி தூக்கத் தயார் என கேள்வி எழுப்பப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைப் பரப்பிற்குள் மேற்கொள்ளும் நிகழ்வுகளிற்கு இராணுவத்தை பயன்படுத்துவது கிடையாது என மாநகர சபையில் தீர்மானிக்கப்பட்ட நிலையில் மாநகர முதல்வர் பிரதி முதல்வர் உள்ளிட்ட சிலர் சென்றிருந்தனர். இது தொடர்பிலேயே உறுப்பினர் சுட்டிக்காட்டியதோடு இது சபையின் தீர்மானத்தை சபையே மீறும் செயல்பாடாக இருப்பதோடு அந்த நிகழ்வில் மாநகரசபையின் உறுப்பினர்களுடன் பணியாளர்களும் பங்குகொண்டமை தவறு . இவ்வாறு சபையின் தீர்மானத்தை மீறுவதானால் இந்த சபையில் தீர்மானம் எதற்கு . அது மட்டுமன்றி குறித்த தீர்மானம் ஏகமனதாகவே எடுக்கப்பட்டது.

அது மட்டுமன்றி சபையின் பெயரிலேயே அழைப்பிதழும் அச்சிடப்பட்டு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. அந்த நிகழ்வு இடம்பெற்ற இடமும் சபையின் ஆளுகைக்கு உட்பட்ட ஓர் பிரதேசம். என்றார்.

இது தொடர்பில் பதிலளித்த முதல்வர் அந்த தீர்மானத்தை நானும் ஏற்றிருந்தேன். இருப்பினும் குறித்த நிகழ்வை நாம் நடாத்தவில்லை. ஆளுநரே ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தார். அத்துடன் நாம் அழைப்பிதழ் விடுக்கவில்லை . அது மட்டுமன்றி அந்த நிகழ்விற்கு சபையின் ஒரு ரூபா நிதி பயன்படுத்தப்படவில்லை. மாறாக பல திணைக்களங்களே அன்பளிப்பாக அந்த மரங்களை வழங்கினர். இருப்பினும் குறித்த மரங்களை காலை மாலையென இரண்டு தடவை நீர. ஊற்றி மூன்று மாதங்கள் பராமரிக்கும் பொறுப்பு மாநாகர சபைக்கு கையளிக்கப்பட்டது.

இவ்வாறு இருதடவை நீர் ஊற்றுவதற்கும் 4 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டது. அப் பிரதேசம் மாநகர சபைக்கு உரியதானாலும் நகர அபிவித்தி திட்டத்தின் கீழ் தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டது பகுதி . என்றார்.

இதனை அடுத்து அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்த சமயம் இவர்களுடன் ஈ.பீ.டீ.பி உறுப்பினர் ரெமீடியசும் இணைந்துகொண்டார். இதன்போது  கூட்டமைப்பின் உறுப்பினர் பாலச்சந்திரன் சும்மா வாய்ச் சவாடலிற்காக போலித் தேசியம் உரைக்க முடியாது எந்த நேரம் என்ன செய்ய வேண்டும் என்பது எமக்கும் தெரியும். அவ்வாறு இல்லா விட்டால் மீண்டும் ஆயுதம் தூக்க இதில் எத்தனைபேர் தயார் என்றார். அதற்கான பதில் வழங்கப்படாதபோதும் சர்ச்சை நீடித்தது. 

இதன்போது உறுப்பினர் பார்த்தீபன் உரையாற்றுகையில் ,

இராணுவத்தை இப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு நாம் கோரிக்கை விடுக்கும் நிலையில். தீர்மானத்தையும் நிறைவேற்றிவிட்டு எம்மவர்களே இராணுவத்தின் நிகழ்விற்கு சென்றால் அது மறைமுக ஆதரவாகவே மக்கள் கருதுவர் என்றார். இதன்போது கருத்துரைத்த உறுப்பினர் ரெமிடியஸ் இது ஓர் இரட்டை நிலைப்பாட்டை ஒத்த செயல் என்றார்.

இவ்வாறு சுமார் 40 நிமிடங்கள் இது தொடர்பில் சர்ச்சை நீடித்த நிலையில் இனி வரும் காலத்தில் இராணுவத்தின் எந்த நிகழ்வுகளிலும் சபை உறுப்பினர்கள் பங்கு கொள்ளாத்தோடு இராணுவத்தினரின் எந்த நிகழ்வானலும் சபையின் ஆளுகையில் உள்ள இடங்களை வழங்கவோ சபை ரீதியில் எவருமே பங்குகொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தினை நான் முன்மொழிகின்றேன்.்இதனை சபை ஏற்கவேண்டும் . அல்லது பகிரங்க வாக்கெடுப்பிற்கு விட வேண்டும். என உறுப்பினர் லோகதயாளன் கோரிக்கை விடுத்தார்.

இவை தொடர்பில் மீண்டும் பதிலளித்த முதல்வர் உணர்ச்சி வசப்பட்டு அவசரமாக கூறும் விடயத்தை வாக்கெடுப்பிற்கு விடமுடியாது . ஆனால் இதனை உறுப்பினர் விரும்பினால் அடுத்த கூட்டத்திற்கு முறைப்படி எழுத்தில் சமர்ப்பித்து பிரேரணையாக எடுத்துக்கொள்ள முடியும். என்றார். -