Jun 22

யாழ்.மாநகரின் அபிவிருத்திகள் யாவும் முன்னுரிமையுடன் கூடிய தேவைகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வேண்டும் - முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா

யாழ்.மாநகரசபையால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள் ஒவ்வொன்றும் மக்களின் தேவைகளுக்கேற்ப முன்னுரிமை அடிப்படையிலும் தேவைகளை அறிந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அத்தகைய ஒரு பொறிமுறையை மேற்கொள்வதனூடாகவே யாழ்.மாநகரின் அபிவிருத்தி பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் ஆர்னோல் தலைமையில் ஆரம்பமானது.  இதன்போது யாழ்.மாநகரின் உள்ளக  வீதிகள் புனரமைப்பு, மின்சார விளக்குகள் பொருத்துதல், சனசமூக நிலையங்கள் அபிவிருத்தி ஆகிய தேவைப்பாடுகளுக்காக 65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான சபையின் அங்கீகாரத்திற்கு விடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா சபையிலுள்ள 45 உறுப்பினர்களதும் பங்களிப்புடன் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதுடன் அவை தேவைகளை அறிந்தும் முன்னுரிமை அடிப்பிடையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு முதல்வர் ஆர்னோல்ட் தெரிவுகளின் அடிப்படையிலேயே அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தமையால் முன்னாள் முதல்வர்  யோகேஸ்வரி பற்குணராஜா அபிவிருத்திகள் யாவும் முன்னுரிமையின் அடிப்படையிலும் மக்களின் தேவைகள் கருதியுமே மேற்கொள்வது நலனளிக்கும் என சுட்டிக்காட்டியிருந்தார்.

யாழ்.கோட்டை பகுதி அபிவிருத்தியின்போது தமிழர் கலாசாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல்!

யாழ்.மாநகரின் அபிவிருத்திகளின்போது தழிழரது கலாசாரங்களை பாதுகாக்கும் வகையில் அபிவிருத்திப் பணிகள் ஒவ்வொன்றும் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபையின் உறுப்பினர் இரா.செல்வவடிவேல் வலியுறுத்தியுள்ளார்.

இன்றையதினம் யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் ஆர்னோல் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது யாழ்.கோட்டை பகுதி அபிவிருத்தி தொடர்பிலான விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

யாழ்ப்பாணம் கோட்டைப் பிரதேசம் மற்றும் அதனை அண்டிய கடற்கரை பகுதியும் அபிவிருத்தி செய்யப்படும் போது எமது பாரம்பரிய கலாசாரங்கள் மற்றும் பண்பாடுகள் அழியாதவண்ணம் உறுதிப்படுத்தப்படுவதுடன் கலாசார சீரழிவுகள் இடம்பெறாத வகையிலும் அவை மேற்கொள்ளப்பட வேணடும்.

தற்போது குறித்த பிரதேசம் யாழ்ப்பாணத்தின் சுற்றுலாத் தளமாக விளங்குவதால் அதிகளவான மக்கள் நாளாந்தம் வந்துசெல்கின்றனர். இதன்போது கலாசார சீர்கேடுகள் பல நாளாந்தம் நடைபெறுவதை அவதானிக்க முடிகின்றது.

அந்தவகையில் தற்போது குறித்த பகுதி மேலும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதால் மேலும் பல சீர்கேடுகள் நடைபெற வாய்பபுள்ளது.

எனவே இத்தகைய கலாசார சீர்கேடுகளுக்கு இடம்கொடாது எமது பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு செயற்பாடுகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அவர்; மேலும் தெரிவித்திருந்தார்.

குறித்த கோரிக்கை சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் தமிழர் கலாசாரங்களை முழுமையாக பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் உறுதி செய்வதுடன் கலாசார சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சபையில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடற்கரை அபிவிருத்தியின்போது கடற்றொழிலாளர்களது வாழ்வாதார தொழில்துறை பாதுகாக்கப்பட வேண்டும் -ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ்!

கடற்கரை அபிவிருத்தியின்போது கடற்றொழிலாளர்களது தொழிலும் அவர்களது வாழ்வாதாரங்களும் பாதிக்கப்படாத வகையில் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் வலியுறுத்தியுள்ளார்.

இன்றையதினம் யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் ஆர்னோல் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குள் இருக்கும் கடற்கரையோரங்களின் அபிவிருத்தி தொடர்பில் விவாதிக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

யாழ்.மாநகரசபையால் முன்னெடுக்கப்படவுள்ள கடற்கரையோர அபிவிருத்தி மற்றும் உல்லாச பயணிகளை கவரும் வகையிலான செயற்றிட்டங்களின்போது குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மேற்கொள்ளும் கடற்றொழிலாளர்களது தொழில் மற்றும் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாத வகையில் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் இப்பகுதிகளை அண்டி வாழும் மக்கள் பலர் குறித்த கடற்பகுதிகளில் மேற்கொள்ளும் தொழிலை நம்பியே தமது வாழ்வாதாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்

தற்போது முன்னெடுக்கப்படவுள்ள கடற்கரை அபிவிருத்தி முயற்சிகள் இவ்வாறான தொழில்துறைகளை எந்தவகையிலும் பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதனூடாகவே மாநகரின் அபிவிருத்தியை மட்டுமல்லாது எமது பகுதி கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரங்களையும் மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றார்.