Jun 22

பயங்கரவாதிகளுக்கு பதிலடி; காஷ்மீரில் கமாண்டோ படை தயார்

ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக, தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த சிறப்பு கமாண்டோ படையினர், அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் எல்லையோர கிராமங்களில், பாக்., பயங்கரவாதிகள், திடீர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான மக்கள், கிராமங்களைவிட்டு வெளியேறினர்.

இந்த தாக்குதல்களில், ஏராளமான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ரமலான் மாதத்தில், ராணுவ நடவடிக்கைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதையும் மீறி, பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், காஷ்மீரில், மக்கள் ஜனநாயக கட்சி தலைமையிலான அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை, பா.ஜ., வாபஸ் பெற்றது. இதையடுத்து, முதல்வர் மெஹபூபா முப்தி, ராஜினாமா செய்தார். ஜம்மு - காஷ்மீரில், கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தேசிய பாதுகாப்பு படையின் சிறப்பு கமாண்டோ படையைச் சேர்ந்த, 100 வீரர்கள், ஸ்ரீநகர் அருகே உள்ள எல்லை பாதுகாப்பு படையின் முகாமில், கடத்தல் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களிடம், இலக்குகளை துல்லியமாக தாக்கும் அதிநவீன துப்பாக்கிகள், கட்டடங்களை ஊடுருவிச் செல்லும் ரேடார் கருவிகள் உட்பட, நவீன போர் கருவிகள் உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் போது, ராணுவ வீரர்கள் தரப்பில், உயிர் சேதங்களை தவிர்ப்பதற்காக, கமாண்டோ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் விரைவில், தங்கள் அதிரடி தாக்குதல்களை துவங்கவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.